மதுரை,
புளுவேல் விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் தனது விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ்,19. இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் விக்னேஷ் தற்கொலை வழக்கு சிறப்பு கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் கூறியுள்ளார். புளூவேல் விளையாட்டு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாணவர்கள் செல்போனில் விளையாடும் விளையாட்டுக்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட சுமார் 3000 பேர் இதுவரை தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave A Reply