===கே.ஏ.தேவராஜன்===                                                                                                                                                               கான்பூர் சதி வழக்கைத் தொடர்ந்து ரஷ்யப்புரட்சியின் தாக்கமும், கம்யூனிசக் கருத்துக்களும் இந்தியாவில் விரைவாகப் பரவின. வர்க்கப் போராட்டங்களும் பெருகின.
1929-இல் கல்கத்தாவில் அகில இந்திய விவசாயிகள் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மாநாடு முடிந்த இரண்டே மாதங்களில் முன்னணித் தலைவர்கள் 31பேர் கைது செய்யப்பட்டனர்.

1928 – 1929களில் பம்பாயில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தது. தொய்வின்றி தொடர்ந்து 6 மாதங்களாக அப்போராட்டம் நீடித்தது. ஒன்றரை லட்சம் பேர் அப்போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.

கல்கத்தா, பம்பாய்ப் போராட்டங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிரொலித்தது.
இந்தப் பின்னணியில் தான் மீரட் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கவும், பரிபூரண சுதந்திரக் கோரிக்கையை ஒடுக்கவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 18 தோழர்கள் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. விசாரணைக்காலம் முழுவதும், 4 ஆண்டுகளும் நமது தோழர்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.

நீதிமன்றத்தின் வாக்குமூலங்கள், அறிக்கைகள், விவாதங்கள், விசாரணைகள் அனைத்தும் நமது பிரச்சார மேடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. வழக்கும் தீர்ப்பும் பிரபலமடைந்தது. பெஷாவார் வழக்கு, கான்பூர் வழக்கு முதல் மீரட் சதி வழக்கு வரை சரியான வழிகாட்டுதல் உதவி இல்லாத பலவீனம் நீடித்த நிலையில் பிரிட்டன், ஜெர்மனி, சீனம் ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலையீடுகளும், வழிகாட்டுதல்களும் மிகவும் உதவின.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் மகோன்னதம்!                                                                                                                                             4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தோழர்களில் கீழ்க்காணும் மூவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள்; 1.பென் பிராட்லி 2. பிலிப்ஸ் பிராட் 3. ஹட்சன்சன்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவுவதற்காகவே இந்தியாவிற்கு வந்தவர்கள். பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்ற பாதாகையை உயர்த்திப் பிடித்த தோழர்கள்!

இதனொரு தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டங்களை அடக்கி ஒடுக்க ஆயுதங்களையும் யுத்த தளவாடங்களையும் பிரிட்டிஷ் துறைமுகங்களில் கப்பல்களில் ஏற்றுமதி செய்தபோது – கப்பல்களில் ஆயுதங்களை ஏற்றமாட்டோம் என்று மறுத்து வேலைநிறுத்தம் செய்த பிரிட்டிஷ் துறைமுகத் தொழிலாளர்களின் வர்க்கப் பாசத்தையும் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் மகத்தான மாண்புகளையும் என்றென்றும் மறக்கவே இயலாத வரலாற்றுப் பதிவாகும்.

அதே போன்று இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்காக இந்திய நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாடுவதற்காக இந்தியாவிற்கு வந்து வழக்காடி உதவிய பிரபல பிரிட்டிஷ் வழக்கறிஞர் யு.என்.பிரிட் முதலானவர்களையும் மறக்க இயலாது.

தண்டனைத் தீர்ப்புகள்!

  • இந்த வழக்குகளில்1933-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை தண்டனைகள்!
  • தீர்ப்பிற்குப் பின்பு இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் தீர்ப்பு மிகவும் கொடுமையானது என்று கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தோழர் முசாபர்அகமது உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஓரிருவருக்கு தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.

ரஜனி பாமிதத்
இவர் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டவர். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானவர். இவர் எழுதிய பிரபல நூல் “ இன்றைய இந்தியா ”ஏராளமான தேசியத் தலைவர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் வழிகாட்டி உதவிய நூல் என்ற பெருமைமிகு வரலாறு இந்த நூலிற்கும் இதனை எழுதிய ரஜனி பாமிதத்திற்கும் உண்டு.

மீரட் சதி வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி லண்டனுக்குச் சென்ற தோழர் பென் பிராட்லியும் தோழர் ரஜனி பாமிதத்தும் இணைந்து இந்தியக் கம்யூனிஸ்டுகளின் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கி உதவினர்.

மீரட் விடுதலைக்குப் பின்பு 1933-இல் கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்தது. அதில், மத்திய கமிட்டியும், டாக்டர் ஜி. அதிகாரியைச் செயலாளராகவும் கொண்ட கட்சி அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்ததும், முறைப்படுத்தப்பட்டதும்,மையப்படுத்தப்பட்டதுமான ஒரு அ.இ. தலைமை உருவாயிற்று. அதன் தொடர்ச்சியாக நாடெங்கிலும் கட்சிக்கிளை அமைப்புக்கள், தொழிற்சங்க அரங்கம், விவசாயிகள் அரங்கம், மாணவர், வாலிபர் அரங்கம், மாதர் அரங்கம், கலை இலக்கிய அரங்கம் முதலான வெகுமக்கள் அரங்கங்கள் உருவாயின; வளர்ந்தன; வலிமை பெற்றன. கூடவே அடக்குமுறையும் தொடர்ந்தது.
தடையும் தலைமறைவும்!
1934 -இல் நாடுமுழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. கட்சியின் பெயரில் எந்தவொரு இயக்கமும், நடவடிக்கையும் கூடாது என்ற அடக்கு முறை ஏவப்பட்டது. கட்சி ஒரு ரகசிய இயக்கமாக மாறிடும் கட்டாயம் நேரிட்டது.

தடைகாரணமாக கட்சி தலைமறைவுக்குத் தள்ளப்பட்டது. தடையையும் தாங்கிக் கொண்டு தலைமறைவிலும் கூட நாடுமுழுவதும் வர்க்க, வெகு மக்கள் போராட்டங்கள் வெடிக்கவே செய்தன. இந்தக் காலத்தில் தீவிர தேசிய வாதிகள் பலர் கட்சியில் ரகசியமாகச் சேர்ந்தனர். அவர்களில் சிலர் சிபிஎம் உதய காலத் தலைவர்களாகவும் நீடித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: