சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத்தினரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஃபெப்சி(தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது திரைப்பட தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து படப்பிடிப்பை நிறுத்தினர். இதனால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் வேறு தொழிலாளர்களை ஈடுபடுத்த போவதாக கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். இதை கண்டித்து கடந்த ஆகஸ்ட் 1 தேதி முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உள்ளிட்ட பல தரப்பினர் நடத்திய மறைமுகப் பேச்சு வார்தையை தொடர்ந்து வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் புதிய ஆட்களுக்கு திரைத்துறையில் வேலை வாய்ப்பு தருவதாக விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளனர். இதனை கண்டிக்கும் வகையிலும், ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 1 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஃபெப்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: