திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேலிய வருகையைக் குறிப்பிட்டு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உதிர்த்த வார்த்தைகளே இவை. இஸ்ரேல் பிரதமரின் இந்தக் கருத்தானது இந்தியா என்கிற இறையாண்மை மிக்க தேசத்தைப் பொறுத்தமட்டிலும் தவறானது; ஆனால், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் விசுவாசமிக்க ஊழியர் என்ற முறையில் நரேந்திர மோடியைப் பொறுத்தமட்டிலும் சரியானது.நேதன்யாகு குறிப்பிட்டதைப் போல இந்தியா – இஸ்ரேல் இடையே நிச்சயிக்கப்பட்ட இந்த ‘திருமணம்’ திடீரென்று நடந்தேறிய ஒன்றல்ல – மாறாக நீண்ட பல ஆண்டுகளாக காதலித்து வந்த காதலர்கள் கரம் கோர்த்த திருமணமாகும்! மததுவேசத்தின் மூலம் பிரித்தாளும் கொள்கையை அடிப்படைக்கூறாய்க்கொண்ட யூத இனவாதிகளும், பன்முக கலாச்சார தேசியத்தைக் கொண்ட மதச்சார்பற்ற இந்தியாவை இந்து கலாச்சார தேசியமாக உருமாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ வாதிகளுமே அந்த நீண்ட நாள் காதலர்கள்.

மகாத்மாவும் சாவர்க்கரும்
       இஸ்ரேலுடன் இந்தியாவின் அணுகுமுறை குறித்து காந்தியின் சொற்களைக் கவனியுங்கள்:
“யூத சகோதரர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் முழுமையாக உண்டு. கிறித்தவத்திற்குள்ளேயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள். இந்து சமயத்திற்குள் எவ்வாறு ஒரு பிரிவினர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்களோ அதனை ஒத்ததாக இது உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே நீதி மறுக்கப்படுவதும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதும் அவர்களை மதத்திலிருந்தே வெளியேறும் நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேற்சொன்ன ஒத்த அம்சங்களோடு, யூதர்களின் மீதான எனது அனுதாபத்திற்கு உலகளாவிய பொதுக்காரணங்களும் உள்ளன.அதே நேரத்தில் இந்த அனுதாபமானது, யூதர்களால் நீதி மறுக்கப்பட்டவர்கள் விஷயத்தில் எனது கண்களை ஒருபோதும் சொந்த தாயகத்திற்காக மறைத்துவிடாது. ஆகவே, யூதர்கள் வடிக்கும் கண்ணீரானது என்னுள் எந்த சலனத்தையும் உண்டாக்கவில்லை. யூதர்கள் பாலஸ்தீனத்துடன் உள்ள பண்டைய வரலாற்றுத் தொடர்பை காரணமாகக் கொண்டு தனது நிலமாக மீட்டெடுக்க முனைவதும், அதனை பைபிள் மூலமாக தமக்களிக்கப்பட்ட சிறப்புரிமையாகக் கருதுவதும் மிகவும் தவறானது”.                                                                       -(ஹரிஜன், 1938)

இதே பிரச்சனையைப் பற்றி இந்து மகாசபையின் தலைவராயிருந்த வி.டி.சாவர்க்கர் கூறுவதைப் பார்ப்போம்:

“யூதர்களுக்கென்று உருவாகியுள்ள தனிநாட்டை (இஸ்ரேல்) உலகின் பெரும்பாலான முன்னணி நாடுகள். (ஏகாதிபத்தியங்கள்) அங்கீகரித்திருப்பதை எண்ணி உள்ளபடியே பெரு மகிழ்ச்சியில் திளைக்கின்றேன். அந்நாடுகள் யூத நாட்டை அங்கீகரித்திருப்பதுடன் தேவையான ஆயுத உதவிகளையும் அளித்து தமது வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளன. பல நூற்றாண்டுகளின் துயரங்கள், தியாகம் மற்றும் போராட்டங்களின் மூலம் யூதர்கள் வெகுவிரைவில் தங்களது தந்தையர் நாடான பாலஸ்தீனம் என்னும் புண்ணிய பூமியை முழுமையாக மீட்டெடுப்பார்கள்”.
    (வி.டி.சாவர்க்கர் அறிக்கை- 1947)

பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்து கூறிய மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றி வந்த சுயேச்சையான அயலுறவுக் கொள்கையின் கரு தென்படுவதைக் காணலாம்.

அதே நேரத்தில் வி.டி.சாவர்க்கரின் வார்த்தைகளில் நரேந்திர மோடியின் வருகையை புளகாங்கிதத்துடன் வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளிப்படுத்திய பெருமகிழ்ச்சியைக் காணலாம்!

ஆக, இந்தியாவின் சுயேச்சையான அயலுறவுக் கொள்கையானது இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராகவும், சுதந்திர பாலஸ்தீனம் அமைவதற்கு ஆதரவாகவுமே நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

எனவே தான் 1947 ஆம் ஆண்டு, மாபெரும் போராளி யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கிளை அலுவலகத்தை புதுதில்லியில் அமைத்துக்கொள்ள இந்திய அரசு அனுமதித்த போது, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், எதிர்ப்பு தெரிவித்ததோடு அல்லாமல், எதிர்ப்பு போராட்டத்தையும் நடத்திய ஒரே அமைப்பு இன்றைய பாஜகவாக மாறுவதற்கு முன்பிருந்த ஜனசங்கம் மட்டுமே ஆகும்!

ஆகவே, இஸ்ரேலின் யூக இனவாத ஆளும் வர்க்கமும், இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளுமே இயல்பான கூட்டாளிகளே தவிர இந்தியா எனும் தேசம் ஒருபோதும் இஸ்ரேலின் இயல்பான கூட்டாளியாக இருந்தது கிடையாது. அவ்வாறு கூறுவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல; வரலாற்று முரணும் கூட!

அமெரிக்காவுடன் நெருக்கம்
அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய உலகக் கட்டமைப்பிற்கான ராணுவ சூழ்ச்சிக் கூட்டணியை வாஷிங்டன் -டெல்அவிவ் – புதுதில்லி என்ற அச்சை உருவாக்கியுள்ளதன் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளது.இந்த அச்சு, இரண்டாம் உலகப் போரின் போது உலகையே ஆட்டிப்படைத்த அச்சு நாடுகள் என்றழைக்கப்பட்ட வரலாற்றின் படுபிற்போக்கான பாசிச அரசுகளின் ராணுவக் கூட்டணியாகிய பெர்லின் – ரோம் – டோக்கியோ அச்சை ( ஜெர்மன்- இத்தாலி- ஜப்பான்) நினைவூட்டுகின்றது!

அமெரிக்காவின் இளைய பங்காளியாகிட ஐமுகூ-1 ஆட்சியின்போதே அச்சாரம் போடப்பட்டுவிட்டது. இதை எதிர்த்துத்தான் ஐமுகூ அரசுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றார்கள். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு வரையிலும் கூட ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்தியா – அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத வர்த்தகக் கூட்டாளி என்ற அந்தஸ்துடனேயே இருந்தது.ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்திற்குள்ளாகவே அமெரிக்காவின், மிக முக்கிய ராணுவ சூழ்ச்சிக் கூட்டாளி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அரசியல் சொல்லாடலில் ராணுவக் கூட்டாளி என்பது கூட்டணியின் அங்கத்தினர் என்றே பொருள்படும். ஆனால், ராணுவ சொல்லாடலில் ராணுவப் படைபிரிவுக்குத் தலைமை தாங்குவது என்றே பொருள்படும்!

அப்படியானால் ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வைப்பது என்கிற புவி அரசியல் ராணுவ சூழ்ச்சிகளுக்கு இந்தியாவை பகடைக்காயாய் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் எத்தனிக்கிறது என்பது நிரூபணமாகி வருகிறது.
அண்டை நாடுகளுடன் சீர்குலைந்த நல்லுறவு!சீனாவுடனான டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறைக்கு அண்டை நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. பூடான் இவ்விஷயத்தில் சீனாவைக் கண்டித்திருந்த போதிலும், இந்தியாவுடன் அதற்கிருந்த பாதுகாப்பு உணர்வு மங்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை அதன் சுயேச்சையான அயலுறவுக்கொள்கையின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்கும் ” அண்டைநாடுகளுக்கே முதன்மை இடம் ” என்பதற்கு எதிரானது;

நேபாளமோ 2015 ஆம் ஆண்டு இந்தியா தன்னிச்சையாக மேற்கொண்ட வர்த்தகத்தடை குறித்த கோபத்திலிருந்து இன்னும் மீளவில்லை; டீஸ்டா நதிநீர்ப் பங்கீடுப் பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதில் மோடி அரசின் இயலாமையின் காரணமாக வங்கதேச அரசும் இந்தியாவுடனான நட்புறவில் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை.

இலங்கையில் மேற்கொண்டுவரும் திட்டப்பணிகளின் காரணமாக சீனாவுடன், அந்நாடு ஏற்கெனவே நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியாவின் மற்றொரு அண்டைநாடான மாலத்தீவும் இந்தியாவை விட சவூதி அரேபியாவுடனான நெருக்கத்தையே பேண விரும்புகிறது!

இது தவிர தெற்காசியப் பிராந்தியத்தில் சீன நிறுவனங்கள் மேற்கொள்ளும் சாலைகள், துறைமுகம் மற்றும் இதர அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவது குறித்து மோடி அரசு குறைபட்டுக்கொள்கிறதே தவிர தனது தரப்பிலிருந்து அண்டை நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையோ, பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் மரியாதை அளித்தல் உள்ளிட்டவற்றில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறது.

மேலும், தெற்காசிய துறைமுகங்களுக்கு எப்போதாவது வந்து போகும் சீனாவின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து கூச்சலிடும் மோடி அரசு, அமெரிக்க போர்க்கப்பல்களை புளகாங்கிதத்துடன் வரவேற்பது மட்டுமின்றி சமீப காலமாக வங்கக்கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ‘மலபார்’ கூட்டு ராணுவப் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்து
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் இந்தியாவிற்கு வளர்ந்துவரும் நாடுகளின் ஆதரவு அவசியமாகும். இந்த நாடுகள் பெரும்பாலும் அணிசேரா நாடுகள் அமைப்பின் அங்கத்தினராக உள்ளன.

ஆனால் தற்போதைய சூழலில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான சார்புக் கொள்கையை கடைப்பிடிப்பதன் காரணமாக அவை இந்தியாவிற்கு ஆதரவளிக்கத் தயங்குகின்றன. குறிப்பாக ஈரான் அணு சக்தி ஒப்பந்த மீறல் குறித்து விமர்சிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த போது அதற்கெதிராக வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கி நின்றது. இது ஈரானுடனான உறவிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆதாரமாகத் திகழும் நாட்டுனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும்.

இவ்வாறாக வளர்ந்துவரும் நாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கத்தின் வெளிப்பாடாகவே கடந்தாண்டு வெனிசுலாவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை என்பது கண்கூடு.

அணிசேராக் கொள்கை
இந்திய அயலுறவுக் கொள்கையின் சிற்பி என அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு 1947, மார்ச் – ஏப்ரல் மாதங்களில் புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய நல்லுறவு மாநாட்டின் தலைவராகப் பங்கேற்றார். இந்த மாநாட்டில் தான், சுயேச்சையான இந்திய அயலுறவுக் கொள்கைக்கான அடித்தளம் இடப்பட்டது. இதில் அவ்வமயம் ஆசியாவில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாகவே 1955ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாண்டூங் மாநகரில் அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவ்வமைப்பின் குரலாக வறுமை, அநீதி, காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதே முதன்மையான நோக்கங்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. பனிப்போர் வளையத்திற்குள் இணைந்து கொள்ள விரும்பாத அணிசேராக் கொள்கையே அடுத்த 40 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அயலுறவுக் கொள்கையாக நீடித்து வந்தது.

இந்தக் கொள்கை அணுகுமுறையானது 1990களுக்குப் பிறகு நரசிம்மராவ் அரசு காலத்திலிருந்து மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தது. குறிப்பாக 1990களில் சோவியத் யூனியன் பின்னடைவுக்குப் பின் பனிப்போர் காலம் முடிவுக்கு வந்ததை காரணமாக வைத்து இந்திய அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் மத்தியில் அயலுறவுக் கொள்கையில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

விளைவு, உள்நாட்டில் அமல்படுத்தத் துவங்கிய நவீன தாராளவாதக் கொள்கையின் நீட்சியாக அயலுறவுக் கொள்கையில் அரசியல் தாராளவாதம் கடைப்பிடிக்கப்பட்டது. சந்தையில் தாராளவாதம் என்பது ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சுரண்டலுக்கு அடிபணிந்து போவதே ஆகும். அரசியலில் தாராளவாதம் என்பது ஏகாதிபத்தியத்தின் அரசியல் ஒடுக்குமுறைக்கு வளைந்து கொடுப்பதே ஆகும்.

அதன் ஒரு பகுதிதான் வாஷிங்டன் – டெல்அவிவ் – புதுதில்லி இதோடு என்று உருவாகியுள்ள புதிய ‘அச்சு’. இது இந்தியாவிற்கு பேராபத்து.

எனவே தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்குமாறு இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. ஏகாதிபத்திய உலகிற்கெதிரான எதிர்ப்பு போரில் நாமும் பங்கேற்போம்!
ஏகாதிபத்தியம் ஒழிக! சோசலிசம் வெல்க!!

-எம்.பாலசுப்பிரமணியன்.(சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மதுரை மாநகர்
• ஆதாரம் * பிரண்ட்லைன் ஆங்கில இதழ் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் -1. 2017
* தி வீக் ஆங்கில இதழ் ஜூலை 16,2017

Leave A Reply

%d bloggers like this: