துபாயில் இருந்து சென்னைக்கு செவ்வாயன்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கேரளா மாநிலம் வடகாரா பகுதியை சேர்ந்த முகம்மது அப்துல் நியாஸ் வைத்திருந்த கேனில் தண்ணீரின் நிறம் வித்தியாசமாக இருந்தது. இது பற்றி அதிகாரிகள் அவரிடம் கேட்ட போது, தைலம் என்று தெரிவித்தார்.சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்த போது தங்கத்தை ரசாயனம் கலந்து உருக்கி தண்ணீரில் கரைத்து கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
அவற்றை தனியாக பிரித்தெடுத்தனர். மொத்தம் 700 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம். இதையடுத்து முகம்மது அப்துல் நியாசை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பாஷா என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, தங்கத்தை உருக்கி கம்பிகளாக கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 510 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம். பாஷா கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அக்பர் என்பவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 2 கிலோ தங்கத்தை சுருள் கம்பிகளாக மாற்றி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அக்பரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 3 விமானங்களில் மொத்தம் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.