கம்பம்;
இந்திய தேசத்திற்கு வழிகாட்டும் வகையில் முன்மாதிரி திட்டங்களை உருவாக்கி கேரள அரசு இடது ஜனநாயக முன்னணி செயல்படுத்தி வருவதாக அம்மாநில நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார்.தேனி மாவட்டம் கம்பம் நகரில் செவ்வாயன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த மாநில மாநாட்டு நிறைவு பேரணி பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

கேரளத்தில் தேசிய திருவிழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி அங்குள்ள தொழிலாளிகளுக்கு சம்பளம், போனஸ், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். கேரளத்தில் வசிக்கும் 300 லட்சம் மக்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 70 லட்சம் பேருக்கு ஆயிரத்து நூறு ரூபாய் வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அத்தொகையை ஆண்டுதோறும் நூறு ரூபாய் உயர்த்தி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

வோளாண் உற்பத்திக்கு ஆதரவு விலை
கேரளத்தில் நெல் உற்பத்தி குறைவு நாங்கள் அரிசிக்காக தமிழ்நாட்டையும், ஆந்திர மாநிலத்தையும் நம்பியிருக்கிறோம். தமிழ்நாட்டில் நெல்லுக்கு ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே வழங்கப்படுகிறது. நாங்கள் அங்கு நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.23 வழங்கி வருகிறோம்.

கேரளத்தில் அதிக அளவில் ரப்பரும், தேங்காயும் உற்பத்தி செய்யப்படுகிறது. மோடி அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையால் கிலோ 230 ரூபாய் விலை கிடைத்து வந்த ரப்பர் வெறும் 110 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் மாநில அரசு ரப்பருக்கான ஆதார விலையை ரூ.150 என தீர்மானத்து சந்தையில் விற்பனை செய்த ரசீதின் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு ஆதரவுத் தொகையை செலுத்தி வருகிறது. அதாவது, ரப்பர் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.150. வெளிச்சந்தையில் விலைரூ.150 மட்டுமே விவசாயிக்கு கிடைக்கிறது என்று சொன்னால், அங்கு கிடைக்காத 40 ரூபாயை விவசாயியின் கணக்கில் கேரள அரசு செலுத்தி வரும். இந்த தொகை போதுமானதல்ல. உற்பத்தி செலவை விட கூடுதலாக 50 சதவீதம் வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதை நோக்கி முன்னேறுகிறோம்.

விவசாயிகளை மிரட்டும் பாஜக அரசுகள்                                                                                                                                                                        நாங்கள் இப்படிச் செய்யும் இதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. இந்தியாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக தோ்தல் பிரச்சாரத்தில் மோடி கூறினார். ஆனால் அதை அவர்கள் மறந்து விட்டார்கள். இன்று தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான விலை வேண்டும் என போராடினால் பாஜக அரசுகள் துப்பாக்கியை காட்டி விவசாயிகளை மிரட்டுகின்றன.

மறுபுறம் பிரதமர் திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு முதல் பணமதிப்பு நீக்கம் செய்வதாக அறிவித்தார். அதன் பாதகமான விளைவுகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

மோடியின் அந்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு கடும் கோபம் வந்தது. செய்தியாளர்களை எனது அலுவலகத்திற்கு அழைத்து, துக்ளக் கூட செய்யாத முட்டாள்தனமான நடவடிக்கையை மோடி செய்வதாக கூறினேன். பின்னர் தில்லியில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்த போது அது குறித்து கேட்டேன். அப்போது அவர் கூறினார். “நாட்டில் 40 சதவீதம் கள்ளப்பணமும் கறுப்புப்பணமும் புழக்கத்தில் உள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புழக்கத்தில் உள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களில் 5 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு மற்றும் கள்ளப்பணத்தை பணக்காரர்கள் எரித்து விடுவார்கள். அந்த மதிப்பிலான பணத்தை நாம் கூடுதலாக அச்சடித்து மக்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து விடலாம்” என்றார். ஆனால் நடப்பது என்ன? மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்த தொகையும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணக்காரர்கள் எல்லாம் கண்ணீர் வடிப்பார்கள் என்று மோடி கூறினார். மோடி கைகளை விரித்து மேடையில் முழங்கினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் மோடி கூறியதற்கு மாறாக பணக்காரர்கள் எல்லாம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஏழைகள்தான் வாய்விட்டு அலறுகிறார்கள்.

ஜிஎஸ்டிக்குள் திணிக்கப்படும் விவசாயிகள்
நாட்டின் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிய மோடி இப்போது ஜிஎஸ்டி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அவற்றை ஜிஎஸ்டிக்கு உட்படுத்தினால்தான் தங்களால் வியாபாரம் நடத்த முடியும் என்று கூறி விவசாயிகளையும் ஜிஎஸ்டி வரி கட்ட நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி, அகற்றி மரக்கடைக்கு (டிம்பர்) விற்பனை செய்தால் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி போடுகிறார்கள்.

முன்பு இதுபோன்று பாதிப்புகள் எற்படாத வகையில் மாநில நிதி அமைச்சர் என்கிற முறையில் வரியை ரத்து செய்ய என்னால் முடிந்தது. இப்போது ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி அங்கு 75 சதவீதம் ஆதரவு கிடைத்தால் மட்டுமே வரி விலக்கு பெற முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று ஏராளமான தொழில்கள் வளர்ந்துள்ளன. வருவாயும் அதிகரித்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் வசதி படைத்த ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பயனளிப்பதாக உள்ளன. விவசாயிகளை மேலும் மேலும் ஏமாற்றினால் தான் பெரும் முதலாளிகளுக்கு அதிக லாபம் பெற்றுத்தர முடியும் என்கிற நிலைபாட்டை மோடி அரசு கையாண்டு வருகிறது
மாற்றுக் கொள்கைகளுடன் இடதுசாரி அரசுகள்

அதற்கு மாற்றான கொள்கைகளை கேரளா மற்றும் திரிபுரா அரசுகள் கடைப்பிடித்து வருகின்றன. கேரளத்தில் பணக்காரர்களின் குழந்தைகளுக்கு இணையாக ஏழைகளின் குழந்தைகளும் கல்வி கற்கும் வசதியை எங்களது அரசு செய்து வருகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அதற்கு தேவையான கட்டிடங்கள் கட்ட 5 ஆயிரம் கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. கடுமையான நோய்களுக்கும் சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் உள்ள அனைவருக்கும் வீடு என்கிற வகையில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புகளில் குடியிருப்புகள் ஏற்படுத்தித் தருகிறோம். மோடியின் முன்மாதிரியான குஜராத் மாநிலத்தில் இன்றும் 47 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை இல்லை. ஆனால் கேரளாவை இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு தாமஸ் ஐசக் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: