திருப்பூர், ஆக. 30 –
செப்.6-ம் தேதி ஈரோட்டுக்கு வருகைதரும் தமிழக முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருப்பூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மற்றும் மக்கள் மன்றம் அமைப்பாளர் எம்.செல்லப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திருப்பூரில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக கீழ்பவானி பாசனம் புறக்கணிக்கப்படுகிறது. பாசனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இதற்கு பவானி சாகர் அணையில் இருந்து உயிர் தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உயிர் தண்ணீர் திறந்துவிடப்படும்போது, கீழ்பவானியில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு நடந்து கொள்ளக்
கூடாது.

அதேபோல், கீழ்பவானி பாசன பகுதி மக்களுக்கு குடிநீர் கேட்டு கடந்த ஜூலை17-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்தோம். கீழ்பவானி பாசன அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியரிடமும் மனு அளித்தோம். ஆனால், இன்று வரை தண்ணீர் வரவில்லை. செப்.1-ம் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிடவிட்டால், 6-ம்தேதி ஈரோடு வரும் தமிழக முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிகவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.