====எஸ்.ஏ.பெருமாள்====
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. நாஜிகள் மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். செஞ்சேனையை எதிரிகளின் டாங்கிப்படை சிதறடித்துக் கொண்டிருந்தது. மாஸ்கோவிலிருந்து 118 கிலோ மீட்டர் தூரத்தில் போர் நடந்தது.

நீண்டவயல்கள், புதர்க்காடுகள், அமைதியாய் பாடர்ந்தோடும் லாமா நதி. ஒரு குன்றின் மீது நின்றிருந்த செம்படைவீரர்கள், நாஜிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நின்றனர்.
அவர்கள் மொத்தமே இருபத்தெட்டுப்பேர்கள் தான். குலோக்கோவ் என்ற அரசியல் போதகர் அவர்களுக்குத் தலைமை தாங்கினார்.

டாங்கிகள் முன்னேறி வந்து கொண்டிருந்தன. அவற்றின் எந்திரங்கள் சடசடவென சத்தமிட்டன. அவர்கள் நாஜி டாங்கிகளை எண்ணினார்கள். அடக்கடவுளே மொத்தம் இருபது வருகின்றனவே என்று சிரித்தார் குலோக்கோவ். இருபது டாங்கிகள், அப்படியானால் நமக்கு ஆளுக்கு ஒன்றுகூட இல்லையே என்று கூறி போர் வீரர்களும் சிரித்தனர். நமது தலைவர் வீரமானவர் தான் என்றனர்.

வீரர்கள் போருக்குப் புறப்பட்டனர். நீண்ட வயல்கள், குன்றுகள், புதர்க்காடுகள், பக்கத்தில் அமைதியாக ஓடும் லாமா நதி. ஆரவாரம் செய்து கிளம்பிய வீரர்கள் முதலாவது ஜெர்மன் டாங்கியை நொறுக்கிவிட்டார்கள். இரண்டாவது டாங்கியும் கடகடத்தது. பின்பு நின்றுவிட்டது. மறுபடியும் வீரர்கள் இடிமுழுக்கம் செய்தனர். தொடர்ந்த முழக்கத்தினூடாக பதினாறு டாங்கிகளை நொறுக்கி விட்டனர். எஞ்சிய ஆறு டாங்கிகளும் பின்வாங்கின.

கொள்ளைக்காரர்களின் குரல்வளையை நெரித்து விட்டோம் போலிருக்கிறது என்றார். சார்ஜெண்ட்- போர்வீரர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். ஆனால் மறுபடியும் முப்பது ஜெர்மன் டாங்கிகள் அணிவகுத்து வந்தன. வீரர்கள் பனியில் உறைந்தவர்கள் போல நின்றிருந்தனர். டாங்கிகள் நெருங்கி வந்து கொண்டிருந்தன.

கேப்டன் வீரர்களைப் பார்த்து “தோழர்களே! ரஷ்யா மாபெரும் நாடு. ஆனால் நாம் பின்வாங்க இடம் கிடையாது. மாஸ்கோ நமக்குப் பின்னால் இருக்கிறது” என்றார். நாங்கள் அதை உணர்கிறோம் என்றனர் வீரர்கள். மறுபடியும் வீரர்கள் போரில் தீவிரமாக இறங்கினர்.
ஆனால் போர்வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டிருந்தார்கள். ஆறு பேர் பலியாகிவிட்டனர். வெடிகுண்டுகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

கேப்டன் குலோக்கோவும் காயமடைந்துவிட்டார். அவர் மிகுந்த சிரமத்தோடு எழுந்து நின்று ஒரு டாங்கியின் மீது வெடிகுண்டை வீசினார். அந்த டாங்கி நொறுங்கியது. வெற்றியின் பெருமிதம் அவர் முகத்தில் தவழ்ந்தது. ஆனால் அதே நேரத்தில் எதிரியின் குண்டுபாய்ந்து மடிந்து போனார்.

இருபத்தெட்டு செஞ்சேனை வீரர்கள் திடசித்தத்தோடு போராடி முதலில் இருபது ஜெர்மன் டாங்கிகளை வீழ்த்தினர். இதில் ஆறுபேர் மடிந்து இருபத்திரெண்டு பேர் மட்டுமே எஞ்சினர்.
ஆனால் தொடர்ந்து முப்பது டாங்கிகள் அவர்களை எதிர்த்து அணி வகுத்து வந்தன. செஞ்சேனை வீரர்கள் எல்லையற்ற வீரத்தோடு போராடினர்.

ஒன்று கூட மிச்சமின்றி டாங்கிகளை அழித்து விட்டு ஒருவர் பாக்கியில்லாமல் மடிந்தனர்.
நாஜிகளுக்கு ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக வீரர்களுக்கு ரஷ்யா நன்றிக்கடன்பட்டிருக்கிறது. இதுபோன்ற வீரத்தை, தற்கொலைத்தாக்குதலை நாஜிகள் வேறெங்கும் சந்திக்கவில்லை.

போர் நடந்த அந்த இடம்- நீண்ட வயல்கள், குன்றுகள், புதர்க்காடுகள், பக்கத்தில் அமைதியாகப் பாய்ந்தோடும் லாமாநதி. ஒவ்வொரு ரஷ்யக்குடிமகனின் இதயத்திலும் அது ஒரு புனிதமான இடம்; தியாக பூமி.

Leave A Reply