திருப்பூர், ஆக. 30 –
வாடும் பயிர்களைக் காக்க பிஏபி, அமராவதி, கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு உயிர்த்தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கேரிக்கை குறித்துப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி எஸ்.ஆர்.மதுசூதனன் பேசுகையில்: இலவச மின் இணைப்புக்கு விண்ணப்
பித்து விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், சுயநிதித் திட்டம் என்ற பெயரில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என இப்போது ரூ.2.50 லட்சம் செலுத்தினால் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு வழங்குவதாக கூறுகின்றனர். பணம் உள்ள விவசாயிகள் மின் இணைப்பு பெற்று விடுகின்றனர்.

ஆனால் 5 ஏக்கர் வரை வைத்துள்ள ஏழை விவசாயிகளால் அது முடிவதில்லை. சுயநிதித் திட்டத்தால், இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு வருகிறது. ஆகவே, சாதாரண விவசாயிகளுக்கு மின் இணைப்புக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசால் திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணத் தொகை ரூ.132 கோடி எனச் சொல்லிவிட்டு பிறகு ரூ.82 கோடி தான் என்றனர். அதுவும் வறட்சி நிவாரணம் அறிவிக்கப்பட்டு ஏழரை மாதங்களில் பல பேருக்கு இன்னும் அத்தொகை கிடைக்கவில்லை. 2012ஆம் ஆண்டு ரூ.330 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வந்த தொகையைத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர். எனவே எதாவது ஒரு வகையில் அந்த தொகையை மீளவும் பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதேபோல், 2006 வனஉரிமைச் சட்டம் அமல்படுத்த தொடங்கி திருவண்ணாமலை, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் மலைவாழ் மக்களுக்கு இடங்களை சர்வே செய்து, நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பால் கொள்முதலில் குளறுபடிதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எஸ்.பரமசிவம் பேசுகையில்: ஆவின் நிறுவனம் 5 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வசதி இருந்தும் 2 அல்லது 2.50 லட்சம் லிட்டர் மட்டுமே பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்கிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் செய்வோர் லிட்டருக்கு ரூ.4 வரை திடீரென குறைத்துவிட்டனர்.

பால் கொள்முதல் பிரச்சனையில் ஏராளமான குளறுபடிகள், பிரச்சனைகள் உள்ளன. எனவே இதில் உள்ள பிரச்சனைகளைக் களைய ஆவின், பால் உற்பத்தியா
ளர்கள், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தார் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த வேண்டும்.பிஏபி கால்வாய் பகுதிகளில் பல இடங்களுக்குப் போக முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டறிந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதம்பட்டி குட்டையில் விவசாயிகள் சிலருக்கு வண்டல்மண் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கையூட்டு பெறும் அதிகாரிகள்:
இதேபோல், வறட்சியில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவற்றைக் காக்க உயிர்த்தண்ணீர் விட வேண்டும். தாராபுரம் தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் குளத்தைத் தூர்வார வேண்டும். அமராவதி பழைய பாசனஆயக்கட்டில் தாராபுரத்தில் உள்ள 4 வாய்க்கால்கள், உடுமலை, மடத்துக்குளத்தில் உள்ள 6 வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கி பணிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

வருவாய்த்துறை, வேளாண்துறையுடன் ஆலோசித்த பிறகு பொதுப்பணித் துறையினர் பிஏபி திட்டத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதி பாசன நீர்வழித் தடத்தில் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு கையூட்டு பெறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கடன் கேட்கும் விவசாயிகளை அலைகழித்து, அவமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பயிர்க் காப்பீடு திட்டம்:
பிஏபி பாசன திட்டத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் மண்டலத்திற்கு 34 நாள்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் மண்டலத்திற்கு ஒரு சுற்று தண்ணீருக்கு பதிலாக குறைவாகவே திறக்கப்பட்டது. அந்த தண்ணீரை வழங்க வேண்டும். மேலும் வறட்சியை கருத்தில் கொண்டும், தற்போது திருமூர்த்தி அணையில் நீர்மட்ட அளவு அதிகரித்து வருவதாலும் மூன்றாம் மண்டலத்திற்கு விரைவாக முழுத் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை சீராக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர்க் காப்பீடு திட்டத்தை கிராமங்கள் வாரியாக பிரித்து உள்ளடக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் கிடைக்காதவர்களுக்கு, பணம் கிடைக்கவும், மாதம் இருமுறைப்படி சம்பளம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும். அமராவதி அணையில் இருந்து குடிநீர், உயிர்த் தண்ணீர் திறந்து கடைமடை வரை செல்லவும், பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களில் தண்ணீர் எடுத்து விட வேண்டும். பிஏபி பாசனத்திற்கு உட்பட்ட ஆண்டிபாளையம் வாய்க்கால் மூலமாக சுமார் 1500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்த வாய்க்காலின் கடை மடை பகுதியான மங்கலம், சுல்தான்பேட்டை, எம்.செட்டி
பாளையம் பகுதிகளில், வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. செடிகளும், குப்பைகளும் மண்டிக் கிடக்கின்றன. இவற்றைத் தூர்வாரி 3-ஆம் மண்டல பாசன நீர் கடைமடை வரை கிடைக்க செய்ய வேண்டும்.

நொய்யலில் சாயக்கழிவு நீர்:
இவை தவிர, நொய்யலில் சாயக்கழிவுநீர் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். கண்டியன்கோயில் பகுதியில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்கும் நோக்கில் வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு நான்கு மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமராவதியிலிருந்து உயிர்த் தண்ணீர் காலம் தாழ்த்தாமல் திறக்க வேண்டும், அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு விளைவிக்கும் விவசாயம் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அமராவதி ஆலை இயங்க வேண்டுமானால் நர்சரி போட வேண்டும். ஆயக்கட்டு பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: