வாஷிங்டன்;
அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் நிறவெறி வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் பெருந்திரள் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் வெள்ளை நிறத்தவரின் மேலாதிக்கம் வெளிப்படையாக இருந்து வருகிறது. கறுப்பர்களுக்கு எதிரான வன்முறைகளில் காவல்துறையினரே நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு இந்த வன்முறை நடவடிக்கைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

நிற வெறி ஆதரவாளர்கள் பாசிச மற்றும் நாஜி ஆதரவு முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். அதோடு, நாட்டின் பல பகுதிகளில் ஊர்வலங்களையும் நடத்தியுள்ளனர். மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் பிரச்சாரங்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சார்லோட்டஸ்வில்லேவை சேர்ந்த மக்கள் நிறவெறிக்கெதிராகத் திட்டவட்டமான போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

“வெள்ளை நிறவெறியை எதிர்கொள்ளப் பேரணி” என்ற பெயரில் பத்து நாட்கள் மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தார்கள். நிறவெறியை எதிர்க்கும் பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 17 மைல் என்ற அளவில் இவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அமைப்பாளர்கள் சார்பில் உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் ஒவ்வொரு நாளும் எப்பகுதியில் மக்கள் சந்திப்பு நடக்கிறது என்ற செய்தியோடு, அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

தங்கள் இணையதளத்தில், “நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் அனைத்து மக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரமிது. அரசிலும், வரலாற்றிலும் தொடர்ந்து இருக்கும் நிறவெறி மேலாதிக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்” என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. தங்கள் போராட்டத்தில் வலியுறுத்தப்படும் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

நிறவெறிக்கு ஆதரவான நினைவுச்சின்னங்களை அகற்ற வேண்டும் என்பதோடு, நிறவெறி ஆதரவாளர்களோடு கைகோர்த்துள்ளதால் டொனால்டு டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தப் பேரணிகள் மற்றும் சந்திப்பு இயக்கங்கள் நிறைவு பெறப் போகிறது. அனைத்துப் பகுதிகளிலும் இவற்றிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சில இடங்களில் நேரடியாகவே நிறவெறி ஆதரவு நினைவுச்சின்னங்களை மக்கள் தகர்த்து வருகிறார்கள்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பலரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக இந்த இயக்கம் இருக்கும் என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: