===எஸ்.ஏ.பெருமாள்===

டாங்கிப் படை
கிரியுகொவோ என்ற ரயில்நிலையத்திற்கும் குடியிருப்புக்கும் அருகில் தீவிரமான போர் நடந்து கொண்டிருந்தது. நாஜிகள் ரஷ்யத் துருப்புகளை கடுமையாக தாக்கினர். போதுமான வீரர்கள் இல்லாததால் ரஷ்யப் படைகள் பின்வாங்க வேண்டியநிலை ஏற்பட்டது.

உடனே படைகளை அனுப்பி உதவுமாறு தளபதிகள் உயர்மட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் உதவிக்காக அனுப்புவதற்கு எந்தப் படையுமில்லை. அனைத்தும் போருக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. தளபதிகள் மீண்டும் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர். சரி, ஒரு டாங்கி படையை அனுப்புகிறோம். சமாளியுங்கள் என்று பதில் வந்தது.ஒரு டாங்கி அதிகாரி தளபதிக்கு முன்னால் வந்து நின்றார். அவர் இளைஞர் மே மாத வானத்தின் நீலநிறம் போல அவரது கண்கள் பளிச்சிட்டன. அவர் தளபதிக்கு வணக்கம் தெரிவித்து உங்களோடு இணைந்து போராட ஒரு டாங்கிப் படையைக் கொண்டு வந்திருக்கிறேன். என் பெயர் லோக் வினென்கோ என்றார்.

தளபதி அளவு கடந்த மகிழ்ச்சியோடு அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார். பின்பு, நன்றி தோழரே, உங்கள் படையில் எத்தனை டாங்கிகள் இருக்கின்றன என்று கேட்டார்.
ஒரே ஒரு டாங்கி என்று அவர் பதிலளித்தார். எத்தனை டாங்கி?

ஒரு டாங்கி, ஒன்று மட்டுமே மிஞ்சியது டி-37.

மாஸ்கோவைச் சுற்றிலும் நடந்த சண்டைகளில் நாஜிகள் அதிகமான சேதமடைந்தனர். ரஷ்யப் படைகளும் சேதமடைந்தன. திடீரென்று கூறப்பட்ட தகவலால் தளபதியின் மகிழ்ச்சி மறைந்துவிட்டது. ரஷ்யாவிலிருந்த டாங்கிகளிலேயே டி-37தான் மிகவும் பழைய ரகம். அளவிலும் மிகவும் சிறியது. அதில் ஒரு எந்திரத் துப்பாக்கி மட்டுமே உண்டு. அதன் இரும்புக் கவசம் சுண்டு விரல் பருமன் தான் இருக்கும்.

உங்கள் உத்தரவுகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன் என்றார் டாங்கிப்படை அதிகாரி.
எங்கேயாவது போய்த்தொலை – அதுதான் உத்தரவு என்று சொல்ல தளபதி வாயெடுத்தார். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

பின்பு அதற்குப் பதிலாக ‘முதல் படைக்குப் போய் உதவிசெய். நாஜிகள் அங்கேதான் மிக அதிகமாக தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தளபதி உத்தரவிட்டார்.
டாங்கி அதிகாரி உடனே முதல் படைக்குப் போய் சேர்ந்தார். காலாட் படையினரோடு சேர்ந்து போரில் இறங்கினார். அவர் மிகத் திறமையாக போர்முறைகளைப் பின்பற்றினார்.

உடனுக்குடன் தனது டாங்கியைத் திருப்பி பலவீனமான இடத்திற்குச் சென்று தனது பீரங்கியைச் சுடுவார். பின்பு வேறிடத்தில் இருப்பார். போர்வீரர்கள் டாங்கியின் உதவியால் உற்சாகமாய் சண்டையில் ஈடுபட்டனர். ஒரு டாங்கிப் படையே வந்திருக்கிறது என்ற வதந்தி வேகமாய் வீரர்களிடம் பரவியது.

போர் வீரர்கள் இருந்த இடத்திலேயே உறுதியாக நின்று போரிட்டனர். நாஜிகளுக்கு ஒரு அங்குல இடத்தைக் கூட விட்டுக் கொடுக்கவில்லை. இவ்வாறு நாஜிகளின் இரண்டாவது தாக்குதலை முறியடித்தனர்.

அதன்பிறகு அடுத்தடுத்த நான்கு தாக்குதலையும் முறியடித்தார்கள். அந்த ஒரே ஒரு டாங்கியை வைத்து அந்தப் படை முழுவதற்குமே உதவியாய் பம்பரமாய் சுற்றி வந்து பீரங்கியால் நாஜிப் படைகளை வீழ்த்தினார் டாங்கிப்படை அதிகாரி.

அந்த முனையில் போர் முடிந்தது. டாங்கி அதிகாரி இளமையாகவும், முறுக்காகவும் பரபரப்போடும் நின்றார்.

செம்படை தளபதி அந்த அதிகாரியை அன்போடு கட்டித்தழுவினார். தோழனே! என் இதயத்தின் ஆழத்திலிருந்த உனக்கு உணர்ச்சிமயமான நன்றியைத் தெரிவிக்கிறேன். இங்கே வந்தது ஒரு டாங்கி அல்ல, ஒரு டாங்கிப் படையே என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறேன் என்றார். டி 37 டாங்கி அடுத்த போர்முனைக்குப் புறப்பட்டது.

Leave A Reply