காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்பட தெற்கு காலனியில்   விநாயகர் சதுர்த்தியன்று தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் புதனன்று (ஆக. 30) சந்தித்து ஆறுதல் கூறினர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் இருந்து இயக்குநர் மதியழகன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.  இந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநில பொதுச் செயலாளர் க.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு

முன்னணியின்  தலைவர்கள் பாதிக்கப்பட்ட நல்லூர் கிராம தலித் மக்களை  சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த விதமான நிவாரணமும்  வழங்கப்படாத நிலையில் உடனடியாக தமிழக அரசு  இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறுகையில், சாதி ஆதிக்க சக்திகள்  திட்டமிட்டு  நடத்திய தாக்குதல் காரணமாக நல்லூர் தெற்கு காலனி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்,  பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஐந்து நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காமல் இருப்பது கடுமையான கண்டனத்திற்குறியதாகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நல்லூர் தெற்கு காலனியில் நிவாரண முகாம் அமைத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் முன்னணியின் சார்பில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

மத்தியதர ஊழியர்கள் உதவி
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்பாட்டின் பேரில்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆகிய மத்திய தர ஊழியர்கள் சங்கத்தின் சார்பில்  தலித் மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிபி.கிருஷ்ணன், நிர்வாகிகள் கோபால், எம்.சண்முகம், தென்மண்டல காப்பீட்டுக்  ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் க. சுவாமிநாதன், தென்மண்டல பொது காப்பீட்டு ஊழியர்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த், மற்றும் நிர்வாகிகள் உமாமகேஷ்வரி, அபிநவ வித்திய தீர்த்தன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், பகுதி செயலாளர் செல்வம், முன்னணியின் மாவட்ட செயலாளர் பாரதிஅண்ணா, பகுதி நிர்வாகிகள் கோவிந்தன், நந்தா, பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply