திருப்பூர், ஆக.30 –
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளபாக்கியை உடனடியாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு 15 வார்டுகள் வீதம் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இரு மண்டலங்களைச் சேர்ந்த 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் கீழ் சுமார் 900 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இதில் உள்ளனர். மாதம் ரூ.6ஆயிரம் வரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிர்வாகம் கால தாமதம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் பணி செய்ததற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்றுகூறி தனியார் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், துப்புரவுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் விரைவில் ஊதியம் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் தகுதி உள்ள வர்களுக்கு உணவுப்படி உள்ளிட்ட விவரங்களை உரிய முறையில் பராமரிக்குமாறு தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: