திருப்பூர், ஆக.30 –
திருப்பூரில் குண்டும், குழியுமான உள்ள சாலைகளை அரசு நிர்வாகம் பராமரிக்காமல் இருப்பதால் பின்னலாடை உற்பத்தி பாதிப்பதுடன், விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே உடனடியாக இந்த சாலைகளைச் செப்பனிட வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கோரியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சமீப நாட்களாக திருப்பூரில் உள்ள பிரதான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இந்நகரில் பெரும்பாலும் பின்னலாடைத் தொழில் சார்ந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த மோசமான சாலைகளில் செல்லும்போது குண்டு, குழிகளில் சிக்கி வாகனங்கள் பழுதடைவதால், பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

அத்துடன் உயிரிழப்பு விபத்துகளும் நேரிடுகிறது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பின்னலாடை வர்த்தகம் தொடர்பாக இங்கு வருவோரும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலைகளைச் செப்பனிட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. எனவே அரசு நிர்வாகம் நகரில் உள்ள சாலைகளை முழுமையாக செப்பனிட வேண்டும். அத்தோடு வெளி மாநிலங்களில் பின்னலாடைத் தொழிலுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படுவதால் இங்கிருந்து உற்பத்தி நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உள்ளது. எனவே பிற மாநிலங்களில் வழங்கும் சலுகைகளை இங்கு வழங்கி பின்னலாடைத் தொழில் இடம் பெயராமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக சந்திப்பதற்கு முதல்வர் வாய்ப்பளித்தால் விபரங்களைத் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: