புதுதில்லி;
விவாகரத்துக்கான (தலாக்) சரியான வழிமுறைகள் பற்றி, மதரஸாக்கள் மூலம் சிறு வயதிலேயே இஸ்லாமிய ஆண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக ‘தர்ஹா- இ- அலா ஹஸரத்’ என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்று தடவை ‘தலாக்’ என்று சொல்வதன் மூலம் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறும் நடைமுறை, இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இம்முறையினால் இஸ்லாமியப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வந்தது.

குறிப்பாக ‘உடனடி முத்தலாக்’ முறைக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
‘முத்தலாக்’ என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி, கடிதம், இ-மெயில், ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் கூட இஸ்லாமிய ஆண்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து அளிப்பதாக இஸ்லாமியப் பெண்கள் குமுறலை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், ‘முத்தலாக்’ முறைப்படியான விவாகரத்து, சட்ட விரோதமானது; இம்முறையைப் பின்பற்றி இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. முத்தலாக் முறையை தடை செய்யும் வகையில் 6 மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதன் பின்னணியிலேயே, ‘தலாக்’ தொடர்பாக சிறுவயதிலேயே இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விவாகரத்துக்கான சரியான வழிமுறைகள் பற்றி பாடம் நடத்த ‘தர்ஹா-இ-அலா ஹஸரத்’ என்ற இஸ்லாமிய அமைப்பு முடிவு செய்துள்ளது.
தங்களின் இந்த முடிவு பற்றி கூறியுள்ள, ‘தர்ஹா-இ-அலா ஹஸரத்’ அமைப்பின் மூத்த நிர்வாகி மௌலவானா ஷாபுதீன் ரஸ்வி, “உடனடி விவாகரத்துக்கான வழிமுறை இஸ்லாத்தில் இல்லை; இஸ்லாமிய சட்டமும் அதை ஆதரிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையே தற்போது மதரஸாக்கள் மூலம் போதிக்க உள்ளதாகவும் கூறியுள்ள ரிஸ்வி, “மதரஸாக்களில் விவாகரத்து பற்றிய புதிய பாடம் சேர்க்கப்பட்ட பிறகு அதன் விவரம் மற்ற மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்” எனவும் “அதை தங்களின் கீழ் உள்ள அமைப்புகள் மூலம் பரப்புவது, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் முடிவுக்கே விடப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

‘தர்ஹா-இ-அலா ஹஸ்ரத்’ அமைப்பின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மதரஸாக்கள்- இஸ்லாமிய பயிற்றுவிப்பு மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: