ஈரோடு, ஆக.30-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை டாஸ்மாக் ஊழியர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 235 டாஸ்மாக் கடைகளில் 160க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழந்தனர்.

இதனையடுத்து அரசின் பிறதுறைகளான வருவாய்த்துறை, வழங்கல்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்றவைகளில் காலியாக உள்ள பணியிடங்களை கல்வி தகுதி அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் மனு அளித்தனர். இதனையடுத்து அரசின் பிற துறைகளில் உள்ள காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, ஈரோடுமாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் என 120 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணிகளுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் விண்ணப்பிக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில வாணிக கழகத்தின் மாவட்ட மேலாளரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

Leave A Reply