கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி  கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள வித்யாலயா பள்ளியில் மதறாஸ் கேரளசமாஜம் சார்பில் புதனன்று (ஆக30) ஓணம் சந்தை துவக்கப்பட்டது,

மலையாள மொழிபேசும் கேரள மக்களின் அறுவடைத் திருநாளாக கருதப்படும் ஓணம் பண்டிகை செப்டம்பர் 4ம் தேதி உலகெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணத்தை யொட்டி ஆண்டுதோறும் ஒருவார காலம் சென்னையில்  இந்த ஓணச்சந்தை நடைபெறுகிறது.

இச்சந்தையில்  கேரளாவின் பாரம்பரிய உணவுப்பண்டங்கள், நேந்திரம் வாழை, சிப்ஸ், ஊறுகாய், கைவினைப்பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், மிட்டாய்வகைகள், சிற்றுண்டிகள், பிரபலமான செட்டு சாரிஸ் உள்ளிட்ட பல பொருட்கள் ஸ்டால்கள் அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் கைவினைப் பொருட்கள் நிறுவனமான ‘கைரளி’ ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவில் அத்தப்பூக்கோலத்தின் மையத்தில் வைக்கப்பட்ட குத்துவிளக்கை விருந்தினர்கள் ஏற்றிவைக்க கே.பி.சுரேஷ்பாபு தலைமையில் துவங்கியது. சமாஜம் பொதுச்செயலாளர் பி.கே.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். விற்பனையை பிரின்ஸ்ஜோஷ் துவக்கி வைக்க என்.முரளிதரன் நம்பியார் பெற்றுக்கொண்டார். டாக்டர்.ஏ.வி.அனூப் (சஞ்சீவனம்), சிவன் அம்பிகா, எம்.சிவதாசன்பிள்ளை, அமராவதி ராதாகிருஷ்ணன், கே.வி.வி.மோகனன், கே.வி.மோகனதாஸ், குருவாயூரப்பன் பாலன், பி.கல்பனா, பி.கே.என்.பணிக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: