கோவை, ஆக. 30 – இந்திய நாட்டின் விவசாயிகளின் நிலையைப்போல் தற்போது சிறுகுறு தொழில்கள் அழியும் நிலையை மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் உருவாகியுள்ளது. மத்திய அரசை எதிர்த்து போராடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோப்மா சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் ( கோப்மா) தலைவர் மணிராஜ், செயலாளர் முத்து ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம்தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலாக்கியது. இதில் குறுந்தொழில்கள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வரிவிதிப்பால் அனைத்து சிறுகுறு தொழில்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 80 சதவீதம் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாய வேலை இழப்பை தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளோம். போர்வெல், கம்ப்ரஸர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் என்கிற வகையில் இத்தொழில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். தொழில்முனைவோரான நாங்கள் மட்டுமல்லாது எங்களை நம்பிய லட்சக்கணக்கான தொழிலாளர்களும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லிவிட்டு ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுவதற்குள் மூன்று வகையான வரியை செலுத்த வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மூலப்பொருட்களின் விலை குறையும் என்றார்கள். ஆனால் ஒரு பொருளுக்கும்கூட விலை குறையவில்லை. உற்பத்தி செய்யப்படும் பொருட்களைவிட வரியே அதிகமாக கட்ட வேண்டியுள்ளது. மேலும், கார்ப்ரேட் பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பொருளும், எங்களைப்போன்ற சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தாயாரிக்கும் பொருளும் ஒரே விலையில் சந்தையில் போட்டி போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருநிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருளும், சிறுகுறி நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருளும் தரத்திலே ஒன்றுதான் என்றாலும், கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவு செய்வதும், இந்த விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்கும் நுகர்வோரின் மோகத்தால் எங்களின் பொருட்கள் சந்தையில் விற்காமல் பெரும் தேக்கமடைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது சிறுகுறு தொழில்முனைவோரின் சந்தையை பெருநிறுவனங்கள் கைப்பற்றுவதற்குத்தான் என்பதை இப்போதுதான் உணரமுடிகிறது. நாங்கள் வரியே வேண்டாம் என்று சொல்லவில்லை குறைந்தபட்ச வரியான ஐந்து சதவீத வரியை மட்டும் நிர்ணயிக்க வேண்டும் என்கிறோம். இதற்காக தொடர்ந்து மத்திய அமைச்சர், மாநில நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து விட்டோம்.

ஆனாலும்,  எந்த முடிவையும் அரசுகள் எடுக்கப்படாததால் நாட்டில் விவசாயிகள் அனுபவித்துவரும் நெருக்கடியைப்போல தொழில்துறைக்கும் ஏற்படும் அபாயமுள்ளது என்றனர். தற்கொலை செய்ய தூண்டும் வகையில் தற்போது சிறுகுறு தொழில்முனைவோர் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுவரை வந்த மத்திய அரசுகள் எல்லாம் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிற இந்த சிறுகுறு நிறுவனங்களை பல்வேறு மானியங்களை அளித்து பாதுகாத்தது. இந்த மத்திய அரசு எங்களை தெருவில் இறங்கி போராட வைத்திருக்கிறது.

இதன் ஒருபகுதியாகவே செப்.8 அன்று கோப்மா சார்பில் மூவாயிர்த்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் கதவுகளை பூட்டிவிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களைப்போலவே கோவையில் உள்ள மற்ற கிரைண்டர், பவுண்டரி, மோட்டர் உற்பத்தியாளர்கள் போன்ற சிறுகுறு நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. எங்களின் போராட்டத்திற்கு அவர்களிடமும் ஆதரவை கேட்டுள்ளோம். அவர்களும் மத்திய அரசை கண்டித்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: