டமாஸ்கஸ்;
பெரும் உள்நாட்டுப் போரைச் சந்தித்து வந்த சிரியாவுக்கு மருத்துவ உதவிகளைப் பெரும் அளவில் செய்து கியூபா சாதனை படைத்துள்ளது.

சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் துவங்கி, அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் வரையில் பெரும் வன்முறையில் இறங்கியிருந்தன. துவக்கத்தில் பல பகுதிகளை அவர்களிடம் இழந்த சிரியா, ரஷ்யாவின் உதவியோடு தற்போது மீட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னார்வத்துடன் கியூபா தயாராகியது.

சிரியா அரசும் அந்த உதவிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று கப்பலில் முக்கியமான மருந்துகளை கியூபா அனுப்பி வைத்தது. இரண்டு டன்கள் எடையுள்ள இந்த மருந்துகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.

அதன்பிறகு கியூபாவின் மருத்துவர்கள் குழு சிரியாவின் பல பகுதிகளில் தங்கியிருந்து மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் மற்றொரு கப்பலில் மருந்துகள் அனுப்பப்பட்டன. இந்த உதவியின் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் நடந்தது.

அதில் பங்கேற்ற சிரியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அலி ஹமூத், “சிரியாவையும், அதன் போராட்டத்தையும் கியூபா ஆதரித்து வருகிறது. அதற்காக அந்நாட்டிற்கு நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரியாவுக்கான கியூபத் தூதுவர் ரோஜெரியோ மானுவல் ரோட்ரிஸ், இரு நாட்டு உறவுகள் மேம்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது மேலும் பலப்பட வேண்டும் என்று கோரினார்.உலகின் பல நாடுகளிலும் கியூபாவின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவத்துறையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் கியூபா, பல நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேரை மருத்துவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.

மேலும் ஆயிரக்கணக்கானவர்களை மருத்துவ உதவியாளர்களாக மாற்றியுள்ளனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் கியூபாவும், சிரியாவும் ஒரே பக்கத்தில் உள்ளன என்று சிரியா ராணுவத்தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கசன் ஹட்டாட் தெரிவித்துள்ளார்.

Leave A Reply