லக்னோ;
கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில், 7 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தது. கடுமையான கண்டனங்களுக்குப் பாஜக அரசானது இப்பிரச்சனை தொடர்பாக குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதே பிஆர்டி மருத்துவமனையில், கடந்த 3 நாட்களில் மீண்டும் 61 குழந்தைகள் வரை உயிரிழந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மூளைக் காய்ச்சலே அதிகமான குழந்தைகளின் உயிரிழப்புக் காரணம்” என்றும், “ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் பருவமழைக் காலத்தில், இவ்வாறு குழந்தைகள் உயிரிழப்பது வழக்கமாகி விட்டது” என்றும், பிஆர்டி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இதுவரை 290 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக பட்டியல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரிலுள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் வழங்கப்படாததால், 71 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியாகினர்.

இவ்விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. முதலில் ஆகாத காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்த்த முதல்வர் ஆதித்யநாத், பின்னர் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினார். இக்குழு அளித்த அறிக்கை அடிப்படையில், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஷ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத் கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்கு இடையேதான், அதே பிஆர்டி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 61 குழந்தைகள் இறந்திருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூளைக்காய்ச்சல் மற்றும், வயிற்றுப்போக்கு காரணமாகவே இக்குழந்தைகள் இறந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“குழந்தைகள் திடீரென இறந்திருப்பது உண்மைதான்; ஆனால், இந்தப் பருவத்தில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) இது புதிதாக நடப்பது அல்ல; கடந்த பல ஆண்டுகளாக இதுதான் வழக்கமாக உள்ளது” என்று பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கே. சிங் கூறியுள்ளார்.

பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாடோ, மருந்துகள் தட்டுப்பாடோ இல்லை என்று கூறியுள்ள டாக்டர் பி.கே. சிங், “நோய் முற்றிய தீவிர நிலைமையில் குழந்தைகள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால்; தேவையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், அவர்களை காப்பாற்றுவது கடினமாகி விடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் காலமாக இருக்கிறது; பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடிய மூளை காய்ச்சல் மற்றும் பிற நோய்த் தொற்றுகள் இந்த காலத்தில் அதிகமாக உள்ளன; பிஆர்டி மருத்துவமனையில், கடந்த ஜனவரி மாதம் தொடங்கி 1250 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்; அவர்களில் 175 பேர் மூளைச்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று டாக்டர் பி.கே. சிங் பட்டியல் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தை எடுத்துக் கொண்டாலும், கடந்த 30 நாட்களில் 290 குழந்தைகள் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர்களில், 77 பேர் மூளைக் காய்ச்சல் காரணமாகவே இறந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: