மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆகியோர் புதனன்று (ஆக.30) கிண்டி, ராஜ்பவனில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் தலைவர்கள் கூறியது வருமாறு:

ஜி.ராமகிருஷ்ணன்:                                                                                                                       டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் 19அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக கடிதம் கொடுத்தனர். அப்போதே எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதிமுக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் ஆளுநர் காலம்கடத்தாமல் சட்டமன்றத்தை கூட்டி, பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார்.

19 எம்எல்ஏ-க்களுக்கு அதிமுக கொறடா நோட்டீஸ் கொடுத்து, தற்காலிகமாக நீக்க முயற்சிப்பதையும், 19 எம்எல்ஏக்களை கடத்திச் சென்று புதுச்சேரியில் வைத்திருப்பதையோ ஏற்க முடியாது. குட்கா விவகாரத்தில் சில திமுக எம்எல்ஏக்களின் பதவியை பறிக்கவும் அரசு முயற்சிக்கிறது. இந்த ஜனநாயக விரோத போக்காகும்.

ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு குழுக்கள் இணைந்த உடனேயே பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் ஒத்துழைத்துள்ளார். எனவே, இப்போது காலம் தாழ்த்தக்கூடாது. காலம்தாழ்த்தினால் விரும்பத்தகாத செயல்களுக்கு வழிவகுக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் இணைவதற்கு பாஜகவின் அகில இந்திய தலைமை பின்னாலிருந்து பஞ்சாயத்து செய்தது. அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. இதனால் அதிமுக மட்டுமல்ல தமிழக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய மோசமான நிலை நீடிக்கக்கூடாது.
19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகவில்லை என்றாலும், ஆளுநரை சந்தித்து, முதலமைச்சருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று கடிதம் கொடுத்துள்ளனர். அப்போதே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதிமுகவிலிருந்து விலகினார்களா இல்லையா என்பது பிரச்சனை அல்ல.

அரசியல் சட்டப்படி சட்டமன்றத்தை கூட்ட வேண்டியவர் ஆளுநர். ஆளுநருக்கு அறிவுறுத்த எதிர்க்கட்சிகள் சார்பாக நாளை (ஆக.31) ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். ஜனதிபதி, ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மக்களிடத்தில் பிரச்சனையை கொண்டு செல்வோம்.

திருமாவளவன்
ஆதரவு விலகல் கடிதம் கொடுத்துள்ள 19 எம்எல்ஏக்களும் அதிமுகவினர் என்ற நிலைதான் உள்ளது. சட்டப்படி அதிமுக உறுப்பினர்களாக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இழந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. 19பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது வேறு கட்சியில் இணைந்தால் தான்  சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும். அவர்களுக்கிடையில் இருக்குழுக்களாக பிரிந்து நின்று சண்டைபோடுகிறார்கள். அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் அதில் தலையிட சட்டம் இடம் தரவில்லை என்றும் ஆளுநர் எங்களிடம் கூறினார்.

இந்தப்பிரச்சனையில் ஆளுநர் தலையிட முகாந்திரம் உள்ளது. 19 பேர் தங்களை சந்தித்து ஆதரவைத் திரும்ப பெற்றுக் கொண்டதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் ஆளுநர் தலையிட அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க அதிமுக அரசுக்கு அறிவுறுத்த வலியுறுத்தினோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை  எங்களுக்கு உள்ளது.

இரா.முத்தரசன்
19பேர் ஆளுநரை நேரடியாக சந்தித்து முதலமைச்சரை சந்தித்து வாபஸ் கடிதம் கொடுத்து ஒருவார காலம் ஆகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலதாமதப்படுத்துகிறார். இதேபோன்ற நிலை கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், கர்நாடகா, புதுச்சேரியில் ஏற்பட்டிருந்தால் அங்குள்ள ஆளுநர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பினாமி அரசை காப்பாற்ற, பஞ்சாயத்து பேசி, அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சியை தொடரச் செய்ய வேண்டும் என்று பாஜக கருதுகிறது. 4 ஆண்டுகளுக்குள் தேடவேண்டியதையெல்லாம் தேடிக்கொள்ள வேண்டும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். இதற்கு பாஜக துணைபோகிறது. இது அப்பட்டமான ஜனநாயக விரோதமான செயல். இதை ஏற்க முடியாது.

தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவேண்டும். ஆளுநர்களுக்கு பாஜக-வில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா என்று மோடியைத்தான் கேட்க வேண்டும். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்போம்.

ஜவாஹிருல்லா
ஒவ்வொரு நாளும் ஜனநாயக படுகொலை நிகழ ஆளுநர் வழிவகுக்கக்கூடாது. 19 அதிமுக எம்எல்ஏக்கள், குட்கா விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய பெரும்பான்மை இழந்த அரசு சபாநாயகர் மூலம் சதி திட்டம் தீட்டியுள்ளதையும் ஆளுநரிடம் கூறினோம். ஒவ்வொரு நாளும் ஆட்சி நீடிப்பதும் ஜனநாயக படுகொலை. அரசியலமைப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுதினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: