மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இழைத்த துரோகத்தை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இயற்றி அனுப்பிய 2 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், நீட் முறைகேடுகளை விசாரிக்க நீதி விசாரணை நடத்தக் கோரியும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் புதனன்று (ஆக. 30) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகே மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசு எம்.எல்.ஏ (திமுக மாணவரணி)  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியதாவது:
இந்தி திணிப்பை எதிர்ப்பதில் முன்னோடி மாநிலமாக இருந்தது தமிழகம். எப்படி இந்தியை 1967ஆம் ஆண்டு மாணவர்கள் போராடி வெற்றி கண்டார்களோ, அதேபோல் நீட்டை விரட்டியப்பார்கள். அந்த மாணவர்களின் போராட்டம்தான் அப்போது ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. 1985ஆம் ஆண்டு அரசு மருத்துவ மாணவர்கள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளை அனுமதியோம் என போராடி வெற்றி கண்டார்கள்.
அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியார்மயமாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் பன்முகத் தன்மையை ஒழிக்கப்பார்க்கிறது.  மத்திய மாநில அரசுகளின் பட்டியலில் உள்ள துறைக்கு ஒத்திசைவு சட்டம் இயற்றும் போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு  கேட்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக கொண்டுவருவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரும் வரை போராட வேண்டும். மாநில உரிமையை மீட்டெடுக்கும் அமைப்பாக இந்த மாணவர் கூட்டமைப்பு செயல்பட வேண்டும். ஆகஸ்ட் 30 வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றார்.

ஒருங்கிணைப்பாளர் எழிலரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:
பாஜவின் நீட் தேர்வு என்ற பாசிச கொள்கையை அதிமுக அரசு கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது. மாநில உரிமை மாணவர் நலன் குறித்து ஆளும் அரசுக்கு அக்கறையில்லை. 1927ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பே எங்களுக்கு கல்வி உரிமை உண்டு என்று நீதிக்கட்சி முழங்கிய மண் இது. அப்படி போராடி பெறப்பட்ட உரிமையை மத்திய அரசு ஒழிக்க முயற்சி செய்கிறது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஏன் மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் கூட அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. தமிழ்நாட்டில்தான் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இப்படி தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதை பாஜக அரசு விரும்பவில்லை என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது:
இந்த கூட்டமைப்பு அகில இந்திய கூட்டமைப்பாக மாற வேண்டும். ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு என முழங்கிய நாள். அகஸ்ட் 30 மோடியே வெளியேறு என முழங்கும் நாள். மத்திய அரசின் நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் அரசு பள்ளிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இதற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை பதில் கூற வேண்டும்.

நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு செல்லாமல் உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன. ஒரு மாநிலத்தில் பதிவு செய்தவர்கள் பிற மாநிலத்திலும் பதிவு செய்துள்ளனர். இது எப்படி நடந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவர் சங்க மாநில செயலாளர் வீ.மாரியப்பன் பேசியதாவது:
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ள சூழலில் கலந்தாய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவத் துறையை ஒழித்து தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியின் ஒருபகுதியே இந்த நீட் என்னும் நுழைவுத் தேர்வு. பாஜக அரசும், அதிமுக அரசும் இணைந்து மாணவர்களின் நலனை பறித்து விட்டார்கள். மத்திய அரசின் சிபிஐ, வருமான வரித் துறை சோதனையை கண்டு பயந்து தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்து விட்டது அதிமுக அரசு என்று சாடினார்.

1500 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவ நுழைவுத்தேர்வு மூலமாக சேர்ந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அனைந்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் தினேஷ், இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி), செந்தூர் (விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்பு), வீ.அன்புராஜ் (திராவிடர் கழகம்), பிரான்சிஸ் (தலித் மாணவர் கூட்டமைப்பு), அல்அமீன் (இஸ்லாமிய மாணவர் அமைப்பு), அசாரூதின் (மாணவர் இந்தியா), மருத்துவர் எழிலன் உள்ளிட்ட பலரும் பேசினர்.

Leave A Reply