ஈரோடு, ஆக.30-
பொதுமக்கள் இணையதளம் மூலம் குறைகளை தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் தலைமையில் மக்கள்குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பெறும் மனுக்கள் கணிணியில் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய துறைகளின் நடவடிக்கைக்காக அனுப்பப்படும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமலே தங்கள் குறைகளை மனுவாக இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி பொதுமக்கள் இணைய வழி மனு செய்ய http://gdp.tn.gov.in என்ற முகவரியையும், மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிலையை அறிய http://gdp.tn.gov.in/status/ என்ற முகவரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் தமிழ், ஆங்கில மொழியில் பொதுமக்கள் மனு செய்யவும், 1.5 MB-க்கு மிகாமல் PDF/JPEG File மூலம் ஆவணங்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தி மனு செய்ய கைப்பேசி எண் அவசியம். ஒவ்வொருமுறை மனு செய்யும்போதும், தீர்வின்போதும் மனுதாரர் கைப்பேசி மூலம் குறுந்தகவல் பெறுவார். ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு மனு எண் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். இம்மனு எண்ணை வைத்தே, அம்மனுவின் நிலையை மனுதாரர் பின்னர் அறிந்து கொள்ள முடியும். மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பான அரசுத்துறையை தவறாக தேர்ந்தெடுத்துவிட்டாலும், மனுவைப் பெறும் துறை அலுவலர், இணையம் மூலம் அதை தொடர்புடைய துறைக்கு மாற்றும் வசதியும் இதில் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை தாங்களாகவே இணையவழி மூலமாக தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply