லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதுகுறித்த விசாரணை அறிக்கையை, உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார். அதில், கூடுதல் தலைமைச் செயலாளர் அனிதா பட்நாகர் ஜெயின், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா உள்ளிட்ட 6 பேரது அலட்சியப் போக்கே, போதிய ஆக்சிஜன் இன்றி குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி பூர்ணிமா சுக்லா இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கான்பூரில் தலைமறைவாக இருந்த ராஜீவ் மிஸ்ராவும், அவரது மனைவி பூர்ணிமா சுக்லாவும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக இருவரும் கோரக்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply