பாட்னா:
பீகார் மாநிலத்தில் எர்கோஸ் என்ற நிறுவனம் சிறு விவசாயிகளுக்கு நுண் கிடங்கு, ஆன்லைன் விற்பனை ஆகிய சேவைகளை வழங்குகிறது. இதனால், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நெருக்கடி விவசாயிகளுக்கு ஏற்படாது என்று இந்நிறுவனம் கூறுகிறது.

இந்த நுண் கிடங்கில் எவ்வளவு குறைவான விளைபொருளையும் இருப்பு வைத்துக்கொண்டு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். இவர்களுடைய கிடங்கில் இருப்பு வைப்பதற்கும், ஆலோசனைக் கட்டணமாகவும் குவிண்டாலுக்கு, மாதத்துக்கு ரூ.6 லிருந்து ரூ.12 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடங்கில் உள்ள விளைபொருட்களை விற்பனை செய்ய ஒரு மொபைல் போன் செயலியும் இந்நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, நிகழ்நேர விலையை அறிந்து, அந்த விலைக்கு ஆன்லைனிலேயே விற்பனையும் செய்யமுடியும். விற்பனை செய்தபின் தொகை 4லிருந்து 7 நாட்களில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இடைப்பட்ட காலங்களில், நிதித் தேவை ஏற்பட்டால், இந்நிறுவனம் கிடங்கில் இருக்கும் பொருட்களுக்குத் தரும் ரசீதைப் பயன்படுத்தி, அதன் மதிப்பில் 70-75 சதவீதம் வரை வங்கிக் கடன் பெறலாம். ஐடிபிஐ வங்கி, ஸ்டேட் வங்கி முதலான வங்கிகள் இவ்வாறான கடன் வசதியை அளிக்கின்றன.

மொபைல் ஆப் மூலம் வெளிப்டையான விற்பனை செய்யப்படுவதால், டீமேட் முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படுவதுபோன்று, விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் பீகாரின் கமஸ்டிபூர், பெகுசரா, முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் 200 முதல் 700 டன் வரை கொள்ளளவுள்ள 24 நுண் கிடங்குகளை அமைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்ட சோளத்திற்கு, இந்த ஏற்பாட்டின்மூலம் இப்பகுதியில் 5000 விவசாயிகள் 20-30 சதவீதம் கூடுதல் விலை பெற்றதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: