கேரளா… அழகுப் பெண்களின் தேசம் மட்டுமல்ல, அறிவுப் பெண்களின் தேசமாகவும் மிளிரிக்கொண்டிருக்கிறது. அங்கு சமீபத்தில் ஒரு பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, மலையாளத் திரை உலகில் இயங்கிக்கொண்டிருக்கிற நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து ‘THE WOMEN IN CINEMA COLLECTIVE’ என்கிற அமைப்பை ஏற்படுத்தினார்கள். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், பாதுகாப்பான பணிச்சூழல், உரிய வாய்ப்புகள் மற்றும் அங்கீகாரம் போன்றவற்றுக்காக தங்களுடைய இயக்கம் தீவிரமாகப் போராடும் என்று சொல்லியிருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

கேரளா பெண்கள்

இந்நிலையில், கேரளப் பெண்களின் அடுத்த அதிரடி, பத்திரிகைத் துறையில் நிகழ்ந்திருக்கிறது. காலம்காலமாக கேரளத்து ஆண் ஜர்னலிஸ்ட்களால் மட்டுமே கோலோச்சப்பட்டு வந்த ‘KUWJ (KERALA UNION OF WORKING JOURNALISTS)’ என்கிற பிரஸ் கிளப் அமைப்புகளில் இந்த வருடம் நிறைய பெண் ஜர்னலிஸ்ட்கள் முக்கியப் பதவிகளைப் பிடித்து, இதுவரை அங்கே புரையோடியிருந்த ஆணாதிக்கத்தை அறுத்தெறிந்திருக்கிறார்கள்.

கேரளாவில், ஜர்னலிஸ்ட்களுக்கான இந்த யூனியன் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கோழிக்கோடு, திருச்சூர், பாலக்காடு, கோட்டயம்… இப்படி கேரளாவின் 14 மாவட்டங்களில் இந்த KUWJ அமைப்பைச் சேர்ந்த பிரஸ் கிளப்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கேரளா முழுக்க இருக்கின்ற பெண் ஜர்னலிஸ்ட்கள் இந்த யூனியனில் உறுப்பினர்களாக இருந்தாலும், இவர்கள் ஒப்புக்குச் சப்பாணி போலத்தான் இந்த யூனியனில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த பிரஸ் கிளப்களில் நடக்கும் தலைவர், செகரெட்டரி, கமிட்டி மெம்பர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் ஆண் ஜர்னலிஸ்ட்களுக்காக, வாக்கு சேகரிக்கச் செல்வது மட்டுமே பெண் ஜர்னலிஸ்ட்களின் வேலையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த வருடம் அப்படி இல்லாமல், வைஸ்-பிரசிடென்ட், செகரெட்டரி, கமிட்டி மெம்பர் போன்ற பதவிகளுக்கு கேரளா முழுக்க இருக்கிற பெண் ஜர்னலிஸ்ட்கள் போட்டியிட்டதோடு மட்டுமல்லாமல் அதில் 90%  அளவுக்கு இவர்களே வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.

ஜிஷா - கேரள பெண்

“பாலினப் பாகுபாடு இருக்கக் கூடாது என்பது, பொதுக்கூட்டங்களிலும் கட்டுரைகளிலுமே பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகிறது. ஆனால், நிஜத்தில் ஒவ்வொரு துறையிலும் பாலினப் பாகுபாடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஜர்னலிசம் துறையில் பாலினப் பாகுபாடு நிறையவே இருக்கிறது. அதை உடைத்து வெளியே வர இந்தத் தேர்தல் எங்களுக்கு நல்லதொரு ஆரம்பமாக இருக்கும்” என்கிறார் ஜிஷா அபிநயா. கேரளாவின் மிகப் பிரபலமான ‘தேசாபிமானி’ என்கிற முன்னணி அரசியல் தினசரியில் சப்-எடிட்டராகப் பணிபுரியும் இவர், இந்தத் தேர்தலில் திருச்சூர் மாவட்டத்து பிரஸ் கிளப்பின் வைஸ்-பிரசிடென்ட் பதவியைப் பிடித்திருக்கிறார்.

“நான் ஆலப்புழாவில் பிறந்து, திருச்சூருக்கு இடம்பெயர்ந்தவள். வளர்ந்தது படித்ததெல்லாம் இங்கேதான். என்னுடைய அப்பா ஜெயன் சேத்தல்லூர் ஒரு தீவிரமான நாடகப் போராளி. அவரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலேயோ என்னவோ, எனக்கும் நாடகங்களின் மீது தீராக்காதல். ஒன்பது வயதில் இருந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுமட்டுமல்ல, இப்போதும் ‘அபிநயா நாடக சமிதி’ என்கிற அமைப்பை உருவாக்கி சமூக அக்கறையுள்ள நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து வருகிறேன். என்னுடைய பத்திரிகையாளர் வேலை என்னை உயிர்ப்புடன் வைத்து வருகிறது.

ஊருக்கு புத்தி சொல்லும் இடத்தில் ஜர்னலிஸ்ட்கள் இருந்தாலும், இன்றும் கேரளாவில் சில மேனேஜ்மென்ட்களில் பெண் ஜர்னலிஸ்ட்கள் பாரபட்சமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். ஒரு பெண் ஜர்னலிஸ்ட் தன்னுடைய உரிமைக்காகப் போராட ஆரம்பித்தால், அவளை எதிர்ப்பவர்கள் அவளுடைய உடல் மற்றும் பாலினம் சார்ந்த ஏளனமான கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஒரு பெண்ணைக் கீழே தள்ள அவளுடைய உடல்  குறித்துப் பேசினால் போதும், அவள் மனதளவில் நிலைகுலைந்து போவாள், தன்னுடைய தீவிரமான போராட்டத்தை கைவிட்டுவிடுவாள் என்கிற பொதுப்புத்தி இந்தத் துறையிலும் நிலவத்தான் செய்கிறது.

எத்தனை திறமையோடு ஒரு பெண் இருந்தாலும், அவளது தனித்தன்மைகளை யாரும் பார்ப்பதில்லை. அவள்  பெண்தானே என்கிற அலட்சியமும் பெண் ஜர்னலிஸ்ட்கள் மீது இருக்கத்தான் செய்கிறது. அதிலும் ஒவ்வொரு அடிமட்ட அளவிலும் பெண் ஜர்னலிஸ்ட்கள் இந்தப் பிரச்னையை சந்தித்துத்தான் வருகிறார்கள். இத்தனை காலமாக இந்த KUWJ அமைப்பில் பெண் ஜர்னலிஸ்ட்கள் பாரபட்சமாகத்தான் நடத்தப்பட்டு வந்தார்கள். இங்கே மிக மிகக் குறைந்த அளவிலேயே பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், இந்த முறை நாங்கள் விதியை மாற்றி இருக்கிறோம்.  இதோ… நாங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டோம். பெண் ஜர்னலிஸ்ட்களுக்கான  சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே நாங்கள் செய்யப்போகும் மிக முக்கிய முதல் வேலை. இதில் ஜெயிப்போம் என்று நம்புகிறோம்” என்கிறார் ஜிஷா அபிநயா.

அனுஶ்ரீ

கோழிக்கோடு பிரஸ் கிளப்பின் கமிட்டி மெம்பராக தேர்வாகி இருக்கிறார் ‘மாத்யமம்’ செய்தித்தாளின் சப்-எடிட்டரான அனுஸ்ரீ. இவரின் வெற்றி வெரி ஸ்பெஷல். பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் ரிசர்வேஷன் மூலம் போட்டியிட்டு ஜெயிக்காமல், பொதுப் பிரிவில் ஆண் போட்டியாளர்களுடன்  மோதி வெற்றியைத் தட்டியிருக்கிறார் அனுஸ்ரீ. அனுஸ்ரீயின் எழுத்துகளுக்கும் நம் தமிழகத்துக்கும் பந்தம் நிறைய உண்டு. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தவிக்கும் பேரறிவாளனை மீட்கப் போராடி வரும் அற்புதம் அம்மாளின் தவிப்பை தான் வேலைபார்த்து வந்த ‘மாத்யமம்’ வார இதழில் தொடராகத் தந்தவர் அனுஸ்ரீ. ‘அடஞ்ஞ வாதிலுகளுக்கு முன்பில் (அடைக்கப்பட்ட கதவுகளுக்கு முன்னால்)’ என்கிற தலைப்பில் வந்த அந்தத் தொடர் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிறகு இது புத்தகமாகவும் வெளிவந்தது. அண்டை மாநிலத்தில் மகனைப் பிரிந்து வாழும் அந்தத் தாய்க்கு மறுக்கப்பட்ட நீதியை பெரும்பான்மையான கேரள மக்கள் அதன் பிறகே உணர ஆரம்பித்தார்கள்.

“ஜர்னலிசம் தொடர்பாக எல்லா வேலைகளையும் பெண்களால் செய்ய முடியாது என்கிற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. நான் அற்புதம் அம்மாளின் தொடரை எழுத ஆரம்பித்தபோது, நிறைய பயணங்களை மேற்கொண்டேன். அவரைச் சந்திக்க அடிக்கடி தமிழகம் வருவேன். அறிவை (பேரறிவாளன்) சந்திக்க வேலூர் சிறைச்சாலைக்கும் செல்வேன். இந்தத் தொடரின் மூலம், நடந்த உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்ல ஓர் ஆண் ஜர்னலிஸ்ட்டுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் உழைத்திருக்கிறேன். பெண் ஜர்னலிஸ்ட்டின் திறமையை ஏளனமாகப் பார்ப்பதை நான் எதிர்க்கிறேன். பெண் ஜர்னலிஸ்ட்களால் இதை மட்டும்தான் செய்ய முடியும் என்பதுபோன்ற, வேலைகுறித்த வரையறைகள் நீக்கப்படவேண்டும். அதற்கு பெண்களாகிய நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறார் அனுஸ்ரீ நம்பிக்கையுடன்.

 

‘ஜனயுகம்’ என்கிற செய்தித்தாளின் ரிப்போட்டராகப் பணிபுரியும் சரிதா கிருஷ்ணா இப்போது கோட்டயம் பிரஸ் கிளப்பின் ஜாயின்ட் செக்கரட்ரி. “மலையாளத்தில் எம்.ஃபில் வரை படித்திருக்கும் நான் ஒன்பது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். ரிப்போர்ட்டராக நிறையப் பயணங்களையும் செய்துவருகிறேன். இப்போது நடந்த தேர்தலுக்கு முன்பு வரை  கோட்டயம் பிரஸ் கிளப்பில் 364 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் 35 பேர் மட்டுமே பெண்கள். அதிலும் பத்துக்கும் குறைவான பெண்களே பிரஸ் கிளப்புக்குச் சென்று வருவார்கள். ஓணம் பண்டிகை வந்தால் பெண் ஜர்னலிஸ்ட்கள் அனைவரும் ஒன்று கூடி, அத்திப்பூ கோலமிட்டு  பண்டிகையைக் கொண்டாடுவது மட்டுமே இங்கே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதனாலேயே மாற்றம் வேண்டி, இந்தத் தேர்தலில் பங்கேற்க நான் முடிவெடுத்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் குடும்பத்தினரின் உதவியோடு அவர்களையும் கவனித்துக்கொண்டு இந்தத் தேர்தலில் கலந்துகொண்டேன். என் துறை சார்ந்த நண்பர்களும் எனக்கு நிறைய ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தார்கள்.
பெண் ஜர்னலிஸ்ட்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் கேரள பெண் ஜர்னலிஸ்ட்கள் தெளிவாக இருக்கிறோம். அதனால், முதலில் பெண் ஜர்னலிஸ்ட்களுக்கான சப்-கமிட்டி ஒன்றை அமைத்து, அவர்களுக்கான துறை சார்ந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செமினார்கள் போன்றவற்றை முதலில் நடத்தப்போகிறோம். பெண்களால் முடியாதது எதுவுமில்லை… இல்லையா?!” – அழுத்தமாகக் கேட்கிறார் சரிதா.
அடிபொலி!

-நன்றி: விகடன்

Leave A Reply