உலக சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட, அசைக்க முடியாத நம்பிக்கையுடன், சகல சுகபோகங்களையும் துறந்து,யாதொரு கர்வமும் இல்லாமல், தியாக வாழ்க்கையை மேற்கொண்ட உலக பாட்டாளி வ்க்கத் தலைவன் லெனின். கட்டுக்குட்டையான உருவத்துடன், வைரம் பாய்ந்த சரீரத்துடன் காட்சியளிப்பார் லெனின். எதையும் எளிதாக, நேரடியாகச் சொல்வது அவருடைய இயல்பின் பிரதான அம்சம். பிரகாசமான விழிகளைக் கொண்ட லெனின், சொல்அலங்காரத்துடன் பேச வேண்டுமென்ற பிரயாசை எதுவும் இல்லாமல், ஒவ்வொரு வார்த்தையையும் திருத்தமாகப் பேசுவார்.

லெனினுடைய பேச்சின் ஒருமைப்பாடு, அதன் பூரணத்துவம், நேர்முகமான சொற்பிரயோகம், சொல்லாற்றல் இவைகளுடன், மேடையில் நிற்கும் அவருடைய தோற்றமும் சேர்ந்து ஒரு மகத்தான ஓவியம் நிற்பது போல் காட்சி தருவார் லெனின். லெனின் சிரிப்பு மோகமானது. லெனின் சிரிப்பதைப் பார்த்து ஒரு ரஷ்ய நாட்டின் மீனவன் சொன்னான், “யோக்கியமான மனிதனால் மட்டும் தான் இந்த மாதிரி சிரிக்க முடியும்”. ஓய்வு நேரங்களை லெனின் எப்போதும் தொழிலாளர்களுடன் தான் கழிப்பார். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிய சிறு சிறுவிபரங்களைக் கூட தெரிந்து கொள்ள ஆர்வம்காட்டுவார். தன்னை சந்திக்கக் கூடியவர்களை பார்த்த இடத்தில், அப்படியே ஆட்கொள்ளக் கூடியவர் லெனின். லெனின் எப்போதும் மிகவும் குறைவாகவே பேசுவார். எப்போதும் போதனை செய்து கொண்டிருக்கமாட்டார்.

லெனினிடம் காணப்படும் பிரதானமான இயல்பு எளிமையே. லெனின் உண்மையைப் போல் அவ்வளவு எளிமையாக இருப்பார். முதலாளித்துவ உலகத்திடம் சற்று கூட விட்டுக்கொடுக்காத, வைராக்கிய சித்தம் படைத்த லெனின், சிரிக்கும் போது கண்ணீர் வரக்கூடிய வகையிலும், மூச்சுத்திணறுகிறவரையிலும், சிறு குழந்தையைப் போல் சிரிப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அவரைப் போல சிரிப்பதற்கு மிக உயர்ந்த, தூய்மையான சித்தம் படைத்திருக்க வேண் டும். சிரித்து முடித்து கண்களை துடைத்துக் கொள்ளும் லெனின், திடீரென்று தமாஷை நிறுத்தி விட்டு, ஆழ்ந்த உணர்ச்சியுடன் பேசத்தொடங்குவார்.

ஹாஷ்யம் ஒரு மிகச் சிறந்த பண்பு என்று சொல்லுவார் லெனின். “ வாழ்க்கையில் துக்கம் இருக்கும் அளவுக்கு வேடிக்கையும் இருக்கும்” என்று சொல்வார் லெனின். லெனினிடத்தில் ஏதோ ஓர் காந்த சக்தியிருந்தது. அந்த காந்த சக்தி பாட்டாளி மக்களின் உள்ளங்களையும், உணர்வுகளையும் அவர் பக்கம் ஆகர்ஷித்தது. லெனின் அடிக்கடி கூறுவது, “ தவறுகளிலிருந்து நாம் பாடம் படிக்கிறோம் “ என்பதாகும். லெனின் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வாலிபத்துடிப்பு இருக்கும். அவருடைய நடமாட்டத்தில் இலகுவும், துறுதுறுப்பும் நிறைந்திருக்கும். அவருடைய பேச்சும், சைகைகளும்,ஜாடைகளும் ஒருலயப்பட்டு அமைந்திருக் கும். குறைந்த வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துச் செறிவிருக்கும்.

லெனின் சற்று மங்கோலிய தோற்றமுடையவர். வாழ்க்கையில் காணும் பொய்களையும், துயரங்களையும் எதிர்த்து அலுப்பு சலிப்பின்றி போராடுகின்ற கூரிய விழிகள் இரண்டும் லெனின் முகத்தில் பிரகாசித்து கொண்டிருக்கும். லெனினின் விழிகள் ஒரு சமயம் உருட்டிவிழிக்கும்; ஒரு சமயம் படபடவென்று இமைகளை கொட்டிக்கொண்டு பார்க்கும்; வேறொரு சமயம் நிந்தனையோடு புன்னகை செய்யும்; ஒரு சமயம் கோபத்துடன் வீசும். லெனின் கண் களின் பிரகாசம் அவருடைய சொற்களுக்கு சோபையைத்தரும். சில சமயங்களில் அவருடைய கட்டுக்கடங்காத ஆத்ம சக்தி கண்களின் வழியாகவும், வார்த்தைகளின் வழியாகவும் திரும்பத் திரும்ப தீப்பொறிகளாகப் பறந்து வந்து, தனியே நின்று பிரகாசிப்பதைப் போலத் தோன்றும்.

சதுரங்கம் விளையாடுவதிலும், உடையின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பதிலும், தோழர்களுடன் மணிக்கணக்காக விவாதம் செய்வதிலும், மீன் பிடிப்பதிலும், காப்ரிதீவின் கல் பாதைகளில் சுடுகின்ற வெயிலில் உலாவுவதிலும், ஒரே மாதிரியான உற்சாகம் காண்பிப்பார் லெனின். அதே உற்சாகத்துடனேயே பொன்னிறத்தில் பூத்துக்குலுங்கும் புதர்களையும், கருப்பு முகதோடு காட்சியளிக்கும் மீனவக்குழந்தைகளையும் பார்த்து களிப்பு எய்துவார் லெனின். மாலை நேரத்தில் ரஷ்ய நாட்டைப் பற்றியும், ரஷ்ய கிராமங்களைப் பற்றியும் உள்ள கதைகளை கேட்டு விட்டு பெருமூச்செறிந்து கொண்டு, ரஷ்யாவைப் பற்றி நான் அறிந்துள்ளது மிக மிகக்கொஞ்சம் என்பார் லெனின்.

லெனின் சிரிக்கும் போது தம் முழு உடம்பாலும் சிரிப்பார். சிரிப்பு வெள்ளம் அவரை பரிபூரணமாக அடித்துக் கொண்டு போகும்படி சிரிப்பார். லெனின் “ ஹூம்… ஹூம்” என்று அடிக்கடி முனகுவது வழக்கம். அதில் எத்தனையோ விதமான மாறுதல்கள் நிகழும். பற்பல உணர்ச்சிகளை அது பிரதிபலிக்கும். வாழ்க்கையின் முட்டாள்தனங்களை அலசி பார்க்கக்கூடிய கூர்ந்த பார்வை படைத்த ஒருவனுக்கு ஏற்படும் நுட்பமான ஹாஷ்ய உணர்ச்சியே, அடிக்கடி அந்த “ ஹூம்… ஹூம் “ முனகலில் நிறைந்திருக்கும். நன்கு கட்டமைந்த வைரம் பாய்ந்த உடம்பைப் பெற்றவர் லெனின். லெனின் தலையை வழக்கமாக பின்னோக்கி சாய்த்துக்கொள்வார்.

அப்புறம்அதை தம் புஜத்தின் பக்கமாகவும் சாய்த்துக் கொள்ளுவார். கஷ்கத்திலும் அரைச் சட்டையின் கைத்துவாரங்களிலும் விரல்களை செருகிக்கொள்வார்.இந்த நிலையில் லெனின் நின்றால், அதுமிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். ஒரு வெற்றிபெற்ற போர்ச்சேவலின் சாயல் அப்போது லெனினைப்பார்த்தால் தெரியும். லெனின் பிரமிக்கத்தக்க மனோதிடம் படைத்தவர். புரட்சிவாதியாக ஒரு அறிவாளியிடம் காணப்படும் உன்னதமான பண்புகளெல்லாம் படைத்த சீரிய மனிதர் லெனின். அவருடைய ஒழுங்கு முறையுள்ள வாழ்க்கை, பல சமயங்களில் அவரை சித்ரவதை செய்வதாகக்கூட உணர்வார் லெனின். “ மற்றவர்கள் கஷ்டமான வாழ்க்கை நடத்துகிறார்கள்; எனவே, நானும் கஷ்டமான வாழ்க்கை நடத்த வேண்டும் “ என்பார். காலை முதல் மாலை வரை சிக்கல் நிறைந்த சிரமமான பணியில் ஈடுபட்டிருப்பார் லெனின். சொந்த சௌகரியங்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பே இருக்காது. ஆனால் தோழர்களின் சுகவாழ்வில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

1919 இல் ரஷ்யாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வெளியூர்களிலிருந்து தோழர்கள், சிப்பாய்கள், குடியானவர்கள் ஆகியோர் அவருக்கு அனுப்பி வைத்த உணவு வகைகளைச் சாப்பிட லெனின் நாணினார். உணவு பார்சல்கள் அவர் இருப்பிடத் திற்கு வந்து சேரும் போது, லெனின் புருவங்களை நெரித்துக் கொள்வார். உள்ளூர சங்கடப்படுவார். அந்த உணவுகளை நோயாளிகளாக உள்ள தோழர்களுக்கும், போதிய உணவு இல்லாமல் பலவீனமாக இருக்கும் தோழர்களுக்கும் அதிவேகமாகக் கொண்டு போய்கொடுப்பார். “என்னை ஒரு பிரபு என்று நினைத்துக் கொண்டு அவர்கள் என்னென்னவோ அனுப்புகிறார்கள். இதை நான் எப்படி தடுப்பேன்? அவர்கள் அனுப்புவதை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுடைய மனம்புண்படும். ஆனால், என்னைச் சுற்றி இருப்பவர்களோ பசியால் பீடிக்கப்பட்டுள்ளார் களே!” என்று வேதனைப்படுவார் லெனின்.

ஒவ்வொருவரைப்பற்றியும், இன்னார் இப்படிப்பட்டவர் என்பதை கண்டு கொள்வதிலும், மகா திறமைசாலி லெனின். அவரவர்களின் சக்திக்கு உரிய பெருமைகளை அளிப்பதில் லெனின் தயங்கவே மாட்டார். டிராட்ஸ்கியோடு ஏராளமான முரண்பாடுகளையும், கருத்து வேறுபாடுகளையும் கொண்டிருந்தாலும், “ஸ்தாபன ரீதியாக அமைக்கும் திறமையில் டிராட்ஸ்கி மிகவும் வல்லவர்” என பிரமாதமாக புகழ்ந்தார் லெனின். டிராட்ஸ்கியைப் பற்றி பேசும் போது லெனின் மிகவும் துயரப்படுவார். “டிராட்ஸ்கி நம்மோடு தான் இருக்கிறார். ஆனால், நம்மில் ஒருவராக இல்லையே!” என்று வேதனைப்படுவார். ஒருமுறை அல்ல; பலமுறை இப்படிச் சொல்லி நீண்ட மௌனம்காப்பார் லெனின். லெனின் இன்று நம்மிடம் இல்லை. உலகம்நிரந்தரமாக நினைவில் வைத்து போற்றக் கூடிய அந்த மாமனிதர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால், அவருடைய சிந்தனையையும், உறுதியையும் பிதுரார்ஜித சொத்தாக பெற்றவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மானுட சரித்திரத்தில் மாபெரும் வெற்றியை அடைந்து வரும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். லெனின்உயர்த்திப்பிடித்த தீப்பந்தத்தை எந்த சக்தியாலும் வீழ்த்திவிடவோ, அணைத்துவிடவோ முடியவே முடியாது.

Leave A Reply

%d bloggers like this: