தமிழகம் உள்ளிட்ட இந்தியக் கடற்கரைக்கு மற்றொரு சுனாமி?
2004 சுனாமியால் பாடம் கற்காத அரசுகள் கண் விழிக்குமா?
======================================

2004 சுனாமி ஏற்பட்டபோதுதான் சுனாமி என்ற ஒன்று பற்றிய தமிழகத்திற்குத் தெரியவந்தது. கடற்கோள் ஏற்பட்டு குமரி கண்டம் அழிந்தது என்ற கதைகளைத் தாண்டி யோசிக்காத தமிழர்கள் திகைத்துப்போயினர்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய கடற்கரைப் பகுதிகள் மீண்டும் சுனாமிக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது என்ற ஆய்வு செய்தி இப்போது வெளிவந்துள்ளது. வழக்கம்போல தமிழ் ஊடகங்கள் அச்செய்தியின் முக்கியத்துவத்தை உணரவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை.

2004 தமிழகக் கடற்கரையில் ஏற்படுத்திய சேதத்துக்கும் உயிர்ப் பலிகளுக்கும் காரணம் கடற்கரையில் மனிதர் செய்து வைத்த காரியங்கள் என்று தெரிய வந்தது. அதன்பின்தான், பேரழிவு நிர்வாகச் சட்டத்தை (Disaster Management Act- 2005) இந்தியா இயற்றியது. அதற்கான தனித்துறையும் நிர்வாகக் கட்டமைப்பையும் ஏற்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஆள் பற்றாக்குறையாலும், வேலைப்பளுவாலும் துவண்டு கிடக்கும் வருவாய் துறையின் பெயரில் பேரழிவு மேலாண்மை நிர்வாகம் என்ற ஒட்டையும் சேர்த்து சட்டக் கடமையை முடித்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் பேரழிவு முன்னெச்சரிக்கை மற்றும் நிர்வாகத் திட்டம் உள்ள மாவட்டங்கள் வெகு சிலவே. ஜெயலலிதா காலத்தில், தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. இதுதான் நமது பேரழிவு தயார் நிலை.
இதற்கிடையில், கடற்கரை ஒழுங்கமைவு மண்டலம் 2011 என்ற விதி உருவாக்கப்பட்டது. இதன்படி 2013க்குள் கடற்கரையில் செய்யப்பட்ட நில ஆக்கிரமிப்புகள், நீர் நிலை பாதிப்புகள், உயலைக் கோடு வரையறை போன்றவற்றை முடித்து கடற்கரை நிலப் பயன்பாடு பற்றிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2017 வரை தூங்கிய தமிழக அரசு அவசரமாக அந்த வேலையைச் சமீபத்தில், ஒரு மாத காலத்தில் முடித்தது. அதாவது, கடற்கரையில் பெரிய மனிதர்கள் செய்த ஆக்கிரமிப்புகள், கம்பெனிகள் செய்த அத்துமீறல்கள் சட்டபூர்வமாக்கப்பட்டுவிட்டன.

இதற்கிடையில், தமிழக கடற்கரை நீளத்தில் 44 சதம் ஏற்கனவே கடலால் அரிக்கப்பட்டு பலவீனமாகி இருக்கிறது.

அதாவது, 2004 வை விடக் கூடுதலான அளவுக்கு தமிழகக் கடற்கரை சீரழிந்து கிடக்கிறது. இதன் விளைவாக, தற்போது ஒரு சுனாமி ஏற்பட்டால் இன்னும் கூடுதல் மரணங்களையும், இழப்பையும் சந்திக்கப் போகிறோம். கடற்கரையைக் கொள்ளையடித்த பெரிய மனிதர்கள் தப்பித்துக்கொள்வார்கள். சாகப்போவது மீனவர்களும் இதர கடற்கரை வாழ் மக்களும்தான்.

சென்ற சுனாமி ஏற்பட்டதற்கான காரணம், ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டும், நாமிருக்கும் யுரேஷிய கண்டத் தட்டும் மோதிக்கொண்டதுதான். அப்போதே, அடுத்தடுத்த கடலடி பூகம்பம் அதனைத் தொடர்ந்து சுனாமி என்று அறிவியலாளர்கள் எச்சரித்தனர். கடந்த 2012லும் இந்த கண்டத் தட்டுகளின் மோதல் காரணமாக கடலடி பூகம்பம் ஏற்பட்டது. ஆனால், அந்தக் கடலடி பூகம்பம் சுனாமியை ஏற்படுத்தவில்லை என்பதால் அழிவு ஏற்படாது போனது.
இப்போது, இந்தியாவிற்கு நேர் தெற்கே, இந்துமகா சமுத்திரத்தில் பூகம்பமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியப் பெருங்கடல் சங்கத்தின் (Ocean Society of India -OSI) ஐந்தாவது மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பூமி அறிவியல் ஆய்வுக்கான தேசிய மையத்தின் (National Centre for Earth Science Studies) இயக்குநர் என். பூரணச்சந்திர ராவ் பேசும்போது தெரிவித்தார். இவர் புவி இயற்பியலில் முன்னோடி அறிஞர் ஆவார்.

அறிஞர்கள் எத்தனைத்தான் எடுத்துச் சொன்னாலும், அறிவியல் அறியாத ஊழல் அரசுகளும், அவர்களை ஊட்டி வளர்க்கும் முதலாளிகளும் இருக்கும் வரை தமிழக கடற்கரை வாழ் மக்களைப் பேரழிவு கொன்று போடுவது முடிவுக்கு வராது.

கூடுதலாக, கடற்கரையோரத்தில் அணு உலைகளை அடுக்கிக்கொண்டு போகிறது மோடி அரசு.. ஒரு கடலடி பூகம்பம் அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டால், ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து போன்ற ஒன்று ஏற்பட்டு தமிழகத்தைச் சுடுகாடாக்கும்.

உயிர் தப்பிக்க வேண்டும் என்றால், இந்த அரசுகளை வீழ்த்த வேண்டியது அவசியம்.

  • Mathi Vanan

Leave A Reply

%d bloggers like this: