புதுதில்லி, ஆக. 29 –
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தார். அப்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்-பரிவாரக் கூட்டம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மசூதிகள் இடித்துத் தள்ளப்பட்டன. பின்னர் இதுதொடர்பான வழக்கில், இடித்துத் தள்ளப்பட்ட மசூதிகளை அரசாங்கமே கட்டித்தர வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

ஆனால், இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தற்போது ரத்து செய்து, அதிர்ச்சி அளித்துள்ளது. 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்கு முஸ்லிம்கள் மீது பழிசுமத்திய ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள், குஜராத் மாநிலத்தில் மூன்று மாதங்கள் வன்முறை வெறியாட்டம் போட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என வித்தியாசமின்றி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை நரவேட்டையாடின. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி,சங்-பரிவாரத்தின் வன்முறைக்கு அப்பட்டமாக துணைபோனார். காவல்துறை மூலம் அதிகாரப்பூர்வமாகவே முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. 500-க்கும் மேற்பட்ட மசூதிகள், தர்ஹாக்கள் இடித்துத் தள்ளப்பட்டன. “முதல்வர் நரேந்திர மோடி ராஜதர்மத்தை கடைப்பிடிக்கவில்லை; அவர் ஒரு சார்பாக நடந்துகொண்டார்” என்று பிரதமராக இருந்த வாஜ்பாய் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார். குஜராத் வன்முறையைக் கண்டு, நாகரிக சமூகம் வெட்கப்படுவதை உணர்த்தும், “ இனி எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்” என்றும் வாஜ்பாய் கேள்வி எழுப்பினார். குஜராத் வன்முறைகள் தொடர் பாக தற்போதும் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 2002-ஆம் ஆண்டு வன்முறையின் போது இடிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை (மசூதி)அரசு செலவில் கட்டி தர வேண்டும் என்று கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றைவழங்கியிருந்தது. ஆனால், அதை ஏற்காத குஜராத் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் செவ்வாயன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் பிரபுல்லா சந்திர பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

குஜராத் அரசு சார்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணத்தை எடுத்து, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறினார். எனினும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள், கடைகள் மற்றும் வீடுகள் முதலியவற்றை சீரமைக்க ரூ. 50 ஆயிரம் வரை கருணைத் தொகை வழங்கும் திட்டம் ஏற்கெனவே குஜராத் அரசிடம் உள்ளதாக தெரிவித்தார். எனவே, மசூதிகளை புதிதாக கட்டித்தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கள் அதை எதிர்த்தனர். வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட மசூதிகளுக்கு இழப்பீடு என்ற வகையில்தான், அவற்றை அரசே கட்டித்தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; இதை குறிப் பிட்ட மதத்திற்கான சலுகை, உதவி என்று எடுத்துக் கொள்ள முடியாது; இது ஒரு நிவாரண நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண் டும் என சுட்டிக்காட்டிக் காட்டினர். ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, குஜராத் வன்முறையால் பாதிக்கப் பட்ட மத சம்பந்தமான வழிபாட்டு தலங்களை அரசு கட்டித் தர வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும், சேதமடைந்த மசூதிகளை அரசு கட்டித்தர தேவையில்லை என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியானதற்கு பிறகு, தீபக் மிஸ்ரா அளித்துள்ள முதல் தீர்ப்பு இதுவாகும்.

Leave A Reply

%d bloggers like this: