ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 58 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 49 பிரிவு அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணிக்கு கடந்த 2010 ஜூனில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில், புனேவைச் சேர்ந்த பான் டான் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்திற்கும், எம்-டெக் இன்னவேஷன்ஸ் நிறுவனத்திற்கும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணிகள் வழங்கப்பட்டன.
இதை எதிர்த்து ஸ்மார்ட் சிப் என்ற நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, குறைந்த தொகைக்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய நிறுவனங்களை விட்டு விட்டு, அதிக தொகைக்குக் கோரிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதால் அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து 2013ல் உத்தரவிட்டார்.

இந்த தடையை எதிர்த்து தமிழக அரசும், டெண்டர் பெற்ற நிறுவனங்களும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதேபோல, டெண்டரில் தோல்வியடைந்த நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகளை நீதிபதி எச்.ஜி. ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர், டெண்டரில் தேர்வு செய்யப்பட்ட இரு நிறுவனங்களும் அதிக தொகைக்கு டெண்டர் குறிப்பிட்டிருந்தாலும், பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், 96 கோடி ரூபாய் வரை குறைத்துள்ளன. மேலும், மனுதாரர்கள் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்தாலும், அந்நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியில் தகுதி பெறவில்லை என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கும், பாரபட்சம் காட்டப்பட்டது என்பதற்கும் எந்த ஒரு திடமான ஆதாரங்கள் இல்லை. இயற்கை நீதியும் மீறப்படவில்லை. சட்டப்படி, முறையாக இந்த டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதால், நீதித்துறை மறுஆய்வு தேவையில்லை எனக் கூறி, டெண்டரை ரத்து செய்ய மறுத்து, தனி நீதிபதியின் தடை உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Leave A Reply