திருப்பூர், ஆக.28-
100 நாள் வேலை திட்டத்தில் 102 நாள் சம்பளம் வரவில்லை என பெண் தொழிலாளி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சி சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி சுப்பாள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நூறு நாள் வேலை திட்டத்தில் கடந்த 2016 – 17 ஆண்டில் 102 நாட்கள் வேலை செய்தும், அதற்குரிய சம்பளம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. எனக்கு பரோடா வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஆனால், அதிகாரிகள் ஐஓபி வங்கிக் கிளையில் என் சம்பளத்தை செலுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர்.

அந்த வங்கிக் கிளையில் எனக்கு சேமிப்புக் கணக்கு எதுவும் இல்லை. எனவே எனது சம்பளத்தில் மோசடி நடைபெற்றிருக்கிறதா என்று ஆய்வு செய்து கண்டறிவதுடன், வேலை செய்த 102 நாட்களுக்கான சம்பளப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இதற்கிடையே, இதுபோல் இப்பகுதியில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Leave A Reply