வன உரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது,
கம்பத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
மத்திய அரசு வனஉரிமைச்சட்டம் 2006ஐ நாடு முழுவதும் அமல்படுத்தி, தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இச்சட்டம் அமலாக்கப்பட்டு சுமார் 16 லட்சம் ஏக்கர் வன நிலங்களில் பழங்குடி மக்களுக்கு முழுமையாக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே திரிபுரா மாநிலத்தில் தான் உச்சபட்சமாக 1 லட்சத்து 24000 ஏக்கர் நிலம் பட்டா உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான மலைப்பகுதிகளில் பழங்குடி மக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மேல், இரண்டு, மூன்று தலைமுறைக்கு மேலாக உழுது பயிர் செய்து தங்கள் அனுபவத்தில் வைத்துள்ளனர்.

வனஉரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது 2006/2007ல் தமிழகத்தை ஆண்ட திமுக அரசும், பின்னர் வந்த அதிமுக அரசு இச்சட்டத்தினை அமல்படுத்திட துளியும் அக்கறை செலுத்தாமல் வழக்கு என்று 10 ஆண்டு காலமாக கிடப்பிலேயே போட்டுவிட்டனர். ஏற்கனவே மலை பகுதிகளில் நிலப்பட்டா வழங்க தடையாணை 1168 திமுக அரசு 1989ல் கொண்டு வந்தது இன்னும் தொடர்கிறது. 2006 வனஉரிமைச்சட்டத்தினை அமல்படுத்திட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி பின்னர் வழக்கின் ஒரு வாதியாக உயர்நீதிமன்றத்தில் இணைந்து வழக்கு நடத்தினோம். 2016 பிப் 1ந் தேதியன்று உச்சநீதிமன்றமே முன்வந்து நாடு முழுவதும் கிடப்பில் போடப்பட்டிருந்த வனஉரிமைச் சட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமென்று தீர்ப்பை வழங்கியது.

இச்சட்டத்தின்படியான உரிமைகளை பழங்குடி மக்களுக்கு அமுலாக்கிட வேண்டும். பழங்குடி மக்களுக்கான நிலஉரிமை, சிறுவன மகசூல் உரிமை, சமூக உரிமை, காடுகளின் மீதான அனைத்து உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் அறிவித்த பின்னரும் 1 ஆண்டுகாலமாக அதிமுக அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது மட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, ஜமனாமுத்துர் போன்ற மலைகளில் அனுபவ நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றிடவும் வனத்துறையினர் முயற்சிக்கின்றனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து இச்சட்டத்தினை அமுலாக்கிட வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சுமார் 8 லட்சம் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையை பின்னுக்குத் தள்ளிய அதிமுக அரசின் இந்நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி 11 ஆண்டுகளுக்கு மேலாகியும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆமை வேகத்தில் வனஉரிமைச்சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. உடனடியாக மாநில அரசு வனஉரிமைச்சட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் முழுமையாக, மனுக்களைப் பெற்று, விசாரணை செய்து உரியவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: