திருப்பூர், ஆக.28 –
காங்கயம் சிவன்மலை வட்டாரத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் திருடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் தனிப்படை அமைத்து ஆடுகள் திருட்டை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க் கூட்டம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கயம் சிவன்மலை கிராமம் ராசாபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.ராமசாமி தலைமையில் கிராம மக்கள் செம்மறி ஆடுகளுடன் மனு அளிக்க வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சிவன்மலை சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம், ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. சமீப காலமாக மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போன சூழலில் செம்மறி ஆடு வளர்ப்பே விவ
சாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த 25ஆம் தேதி தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 11 செம்மறி ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக மறுநாள் காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதுடன், வேலைப்பளு அதிகம் இருப்பதால் ஆடுகளைக் கண்டுபிடிக்க இயலாது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே வட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் வரும். ஆனால் ஆடுகள் திருட்டு தொடர்பாக புகார் அளித்தால் காங்கயம் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. அதே சமயம் ஆடுகள் திருட்டு தொடர்ந்து வருகிறது. எனவே தனிப்படை அமைத்து அல்லது காங்கயத்தில் கூடுதல் காவலர்களை அமர்த்தி ஆடுகள் திருட்டைத் தடுத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஓய்வூதியம் கோரி மனு:
உடுமலை வட்டம் மூங்கில் தொழுவு மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான முதியோருக்கு கடந்த 14 மாதங்களாக தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து மாதாந்திர ஓய்வூதியத் தொகை கிடைக்க வில்லை. எனவே ஓய்வூதிய நிதியை நிலுவைத் தொகையுடன் சீராக வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் முறையிட்டனர். செப்டம்பர் 2ஆம் தேதி அந்த தொகை கிடைத்துவிடும், உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் பதிலளித்தார்.

குடிநீர் கோரி மனு:
பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி கொடுவாய் நாகலிங்கபுரம் தோப்புக்காடு பகுதி மக்கள் அளித்த மனுவில் இப்பகுதியில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அனைவரும் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர் குடும்பங்களாக இருந்தும் குடிக்க குடிநீரும், ஆழ்குழாய் நீரும் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வண்டி மூலம் ரூ.500, ரூ.700 என பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும், ஆழ்குழாயை சீரமைத்தும், குடிநீர் கிடைக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு:
அதே ஊராட்சியைச் சேர்ந்த 9, 10, 11ஆவது வார்டுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடுவாய், வெள்ளியம்பாளையம், நாகலங்கபுரம், லட்சுமிநகர், இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்புகள் நிறைந்த, மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லும், கோயில் அருகாமையில் புதிதாக மதுபானக் கடை திறக்க முயற்சி நடைபெறுகிறது. ஏற்கெனவே  கடந்த வாரம் ஆட்சியரிடம் இக்கடையை அனுமதிக்க கூடாது என மனு அளித்தபோதும், மீண்டும் அக்கடையைத் திறக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே அந்த இடத்தில் மதுபானக் கடையைத் திறக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

இலவச பஸ்பாஸ்:
பல்லடத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசுக் கல்லூரியில் 210 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்கள் திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் இருந்து பேருந்துகள் மூலம் கல்லூரிக்கு வருகின்றனர். இவர்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் என்று பல்லடம் அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.

திருப்பூர் அண்ணாநகர் பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். வறிய நிலையில் ஒரே வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் சேர்ந்து வசித்து வருவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

விலையில்லா ஆடுகள் முறைகேடு:
பொங்கலூர் அலகுமலை ஊறாட்சி வேலாயுதம்பாளையம் கிராமத்தில் தகுதியற்ற, வசதியானவர்களிடம் ரூ.1000 கையூட்டு பெற்றுக் கொண்டு கால்நடைத் துறை அதிகாரிகள் விலையில்லா ஆடுகள் வழங்கியுள்ளனர். இப்பிரச்சனையில் ஆய்வு செய்து, அதே கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 30க்கும் மேற்பட்ட விதவைகள், இரு திருநங்களைகள் உள்ளிட்ட நூறு பேரில் தகுதியானவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க வேண்டும், தவறிழைத்த கால்நடைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக எஸ்.ஜோதிமணி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: