அகமதாபாத்,

போலிச்சாமியார் ஆசாராம்பாபு மீதான பாலியல் வழக்கில் குஜராத் அரசின் செயல்பாடுகள் நத்தை வேகத்தில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு(75) என்பவர்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, குஜராத் மாநிலத்தில் இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குஜராத் மாநிலத்திலும் இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை ஜாமினில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆசாராம் பாபுவுக்கு எதிராக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நத்தை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், தனது உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என ஆசாராம் பாபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டுபடித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

மேலும், குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மற்றும் மேலும் 46 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத நிலையில் அரசு தரப்பு சாட்சிகளில் இருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு தொடர்பான விசாரணையின்போது இதை எல்லாம் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், குஜராத் நீதி மன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் வேகத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாததை அறிந்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறும், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் என்.வி. ராமண்ணா, அமிட்டவா ராய் ஆகியோர் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

அரியானாவில் பாலியல் வழக்கில் குற்றவாளி என சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கை பாதுகாக்க அரசியல் பிரமுகர்கள், மற்றும் மதச்சார்புடையை இயக்கங்கள் முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் குஜராம் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: