சென்னை;
எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே மேற்கொண்டு மக்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.விலைவாசி உயர்வில் பெரும்பங்கு வகிப்பது பெட்ரால் மற்றும் டீசல் தான். பெட்ரால் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்துவிடும்.

பெட்ரோல் -டீசலுக்கான விலையை நிர்ணயிக்கும் தனது பொறுப்பை மத்திய அரசு கைவிட்டு, எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது தவறு என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

எண்ணெய் நிறுவனங்கள் 15 தினங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்து வந்த நிலையில் ஜூன் 16-ம் நாள் முதலாக தினசரி விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது என்பது தங்கள் விருப்பம் போல் விலையை உயர்த்திக் கொள்ள செய்துள்ளது.

இதன் விளைவாக கடந்த ஜூலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ 6 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 3.67ம் உயர்த்தப்பட்டுள்ளது.மூன்றாண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய அதிக பட்ச விலை உயர்வின் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து, பொது மக்களுக்கு மேலும் மேலும் பொருளாதார இழப்பையும், நிதிச் சுமையினையும் மத்திய அரசு ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.

எண்ணெய் நிறுவனங்களை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற்று அவர்களின் செல்வச் செழிப்பை மேலும் உயர்த்தி, பொதுமக்களின் நலனுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையை கண்டிப்பதுடன், எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே மேற்கொண்டு மக்கள் நலன் காக்க முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply