சென்னை,

பகுத்தறிவின் பெயரால் மதக்கட்டுப்பாட்டை மீறுவதால் தான் இயற்கை அழிக்கப்படுகிறது என்று நீதிபதி எஸ் வைத்தியநாதன் தன் தீர்ப்பில் வழக்கிற்கு சம்மந்தமில்லாத பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை  உயர்நீதிமன்த்தில், வனிதா மாணிக்கவாசகம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை அண்ணாசாலை, ஸ்மித் தெருவில் வணிக வளாக கட்டியதால் விதிமுறைகளின்படி, 100 சதுர மீட்டர் நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினேன். ஆனால், அந்த நிலத்தை மாநகராட்சி முறையாக பராமரிக்கவில்லை. அந்த நிலத்தில் பூங்காவாக பராமரிக்க விரும்புகிறேன். எனவே அந்த நிலத்தை என்னிடம் ஒப்படைக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநகராட்சி வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடுவது போல குப்பைகள் கொட்டப்படவில்லை என்றும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதாகவும் கூறி, அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிலத்தை சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து தாக்கல் செய்துள்ளது நன்றாக தெரிகிறது. இதனால் மாநகராட்சி மனுதாரரிடமே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சுற்றுச்சூழல் சீரழிவு, புவி வெப்பமடைதல் ஆகியவை இந்த உலகுக்கு பேரழிவை தரக்கூடிய விதமாக உள்ளது. நம் முன்னோர்கள் இயற்கையையும், மரங்களையும் தெய்வமாக வணங்கினர். தெய்வ வழிப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லாததால், இயற்கை வளங்கள் அப்போது காப்பாற்றப்பட்டன. ஆனால், பகுத்தறிவு என்ற பெயரில், மதரீதியான நடவடிக்கைகளை மூடநம்பிக்கை என்கிறோம். மத கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டோம். இப்போது இயற்கை அழிக்கப்பட்டு கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். மரம் வளர்த்தால், மண் வளம் பெறும். சுத்தமான பிராணவாயு கிடைக்கும். காற்று மாசு குறைக்கப்படும்.

இதுபோன்ற திறந்தவெளி நிலங்களில், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டும். சமுதாய முன்னேற்றம் என்பது இயற்கை வளங்களை அழிக்கும் விதமாக இருக்கக்கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையான வளர்ச்சியே தற்போது தேவை. இந்த வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

நீதிபதி வைத்தியநாதன் இதுபோல் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழக்குவது முதல்முறையல்ல. இதேபோல் கடந்த 2015ம் ஆண்டு திருச்சி மாவட்டம், அக்கியம்பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவர், விநாயகர் கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், கலைநிகழ்ச்சி நடத்த அனுமதிகோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மனுவுக்கு சம்பந்தமில்லாமல் தமிழக கோயில்களில் ஆண்கள் வேட்டி, மேல்துண்டு போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் போன்ற உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்துவர வேண்டும்  என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் கிருபாகரன் அடங்கிய அமர்வு இடைக்காலத்தடை விதித்தது.

மேலும் ஆடைக்கட்டுப்பாடு குறித்த  தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம்  தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: