===பெரணமல்லூர் சேகரன்===
நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்னும் பிரசுரத்தின் நோக்கங்கள் குறித்துப் பிளக்கானோவுக்கு 1903 மார்ச்சில் லெனின் எழுதிய கடிதத்தில், விவசாயச் செயல்திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எளிதாக விளங்கும் பிரசுரம் ஒன்றைத் தாம் எழுதிக் கொண்டிருப்பதாகவும், நாட்டுப்புறத்தில் வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சியக் கருத்தை நாட்டுப்புற மக்களின் நான்கு அடுக்குகள் (நிலப் பிரபுக்கள்,விவசாய முதலாளித்துவ பகுதியினர், நடுத்தர விவசாயிகள், பாட்டாளிகளும் அரைப்பாட்டாளிகளும்) சம்பந்தமான திண்ணமான அம்சங்களின் அடிப்படையில் அதில் விளக்கியிருப்பதாகவும் லெனின் தெரிவித்தார்.

1903 மே மாதத்தில், ரஷ்யாவில் சமூக ஜனநாயகவாதிகளின் அயல்நாட்டு லீகின் தனிப் பிரசுரமாக இது முதலில் வெளியிடப்பட்டது. 1904ஆம் ஆண்டுப் பிரசுரம் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளான தொழிலாளர் கட்சியின் மத்தியக் கமிட்டியால் வெளிநாடுகளில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. ரஷ்யாவிலும் பலமுறை வெளியிடப்பட்டது.

இத்தகைய லெனினது பிரசுரம் விரிவாகப் பரப்பப்பட்டது. அதன் பிரதிகள்வெளிநாடுகளிலிருந்து ரஷ்யாவிற்குக் கொண்டுவரப்பட்டு வெவ்வேறு நகர்களுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இரகசிய சமூக ஜனநாயகவாதிகளான தொழிலாளர்
வட்டங்களிலும் அது ஆராய்ந்து கற்கப்பட்டது. தரைப்படைக்குள்ளும கடற்படைக்குள்ளும் புகுந்தது. உயர்நிலைப் பள்ளிகள்,கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்களுடைய கரங்களையும் எட்டியது. 1905ஆம் ஆண்டில் இப்பிரசுரத்தின் சட்டப்பூர்வமான வெளியீட்டைத் தயாரித்துவிட்டார் லெனின்.

நாட்டுப் புறங்களில் வர்க்கப் போராட்டம் என்பதற்குள் புகுமுன் வர்க்கப் போராட்டம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறார் லெனின்.

“ஒரு பகுதி மக்கள், மறுபகுதி மக்களுக்கு எதிராக நடத்தும் போராட்டமாகும். உரிமைகளற்றவர்கள், ஒடுக்கப்பட்டோர், உழைப்பில் ஈடுபட்டோர் ஆகியோர் சிறப்புச் சலுகைகள் பெற்றுள்ளவர்கள், ஒடுக்குபவர்கள், பிறர் உழைப்பில் வாழ்கிறவர்களை எதிர்த்து நடத்தக் கூடிய போராட்டமாகும்; கூலிக்கு உழைக்கும் தொழிலாளர்கள் அல்லது பாட்டாளிகள், சொத்துரிமையாளர்கள் அல்லது பூர்ஷுவாக்களுக்கு எதிராக நடத்தும் போராட்டமாகும்.”
“இந்தப்போராட்டத்தை எல்லாரும் பார்ப்பதில்லை, எல்லோரும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை என்றாலும் இம்மகத்தான போராட்டம் ரஷ்ய கிராமத்திலும் எப்போதும் நடந்து வந்திருக்கிறது.

இப்போதும் நடக்கிறது. பண்ணை அடிமை முறை காலத்தின்போது திரளான விவசாயிகள் அனைவரும், ஜார் அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு வந்த ஒடுக்குவோர்கள், நிலப்பிரபுக்கள் வர்க்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்.

அப்பொழுது விவசாயிகள் ஐக்கியப்படமுடியவில்லை; அறியாமையால் அறவே நசுக்கப்பட்டிருந்தனர்; நகரத் தொழிலாளிகளிடையே அவர்களுக்கு ஆதரவு தருவோர்களும் சகோதரர்களும் இருக்கவில்லை; இருந்தபோதிலும் தங்களால் இயன்றவகையில் அவர்கள் போரிட்டார்கள். அரசாங்கத்தின் குரூரமான கொடுமைப்படுத்தலுக்கு அஞ்சிப் பின்வாங்கவில்லை.

கசையடிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சவில்லை; பண்ணை அடிமை முறை கிறிஸ்தவ வேதநூலால் அங்கீகரிக்கப்பட்டு, கடவுளால் விதியாக்கப்பட்டது என்று நிரூபிக்கப் பாதிரிகள் எவ்வளவோ முயன்ற போதிலும் விவசாயிகள் அவர்களை நம்பவில்லை; ஒருசமயம் ஓரிடத்திலும், மற்றொரு சமயம் வேறிடத்திலும் விவசாயிகள் கலகம் செய்து கிளர்ந்தெழவே, விவசாயிகள் அனைவரின் பொது எழுச்சி ஏற்படுமென்று பயந்து, இறுதியாக அரசாங்கம் விட்டுக் கொடுத்தது.”

இவ்வாறாக நாட்டுப்புறங்களில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்கள் குறித்து தெளிவாகப் பரிசீலித்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் விவரிக்கிறார் லெனின் ;-
“பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது; ஆனால் முழுவதுமாக அல்ல. விவசாயிகள் உரிமையற்று இருந்தனர். பண்ணை அடிமை முறைத் தளையின் இறுகிய பிடிக்குள் இருந்தனர். உழவர்களுக்குள் அமைதியின்மை நீடிக்கிறது; முழுமையான உண்மையான சுதந்திரத்தை பெற அவர்கள் தொடர்ந்து முயன்று வந்தனர். இதற்கிடையில் பண்ணை அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் புதிய வர்க்கப் போராட்டம் எழுந்தது; பூர்ஷுவா வர்க்கத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமிது”.

இவ்வாறு விவரிக்கும் லெனின் 1902இல் முதல் விவசாயிகள் எழுச்சி ஏன் ஒடுக்கப்பட்டது என்பதற்கான 3 காரணங்களைக் குறிப்பிடுகிறார்.

“விவசாயிகளின் எழுச்சி ஒடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் அது அறியாமை கொண்ட வர்க்க உணர்வில்லாத மக்களின் எழுச்சியாக இருந்தது. தவிரவும் தெளிந்த, திட்டவட்டமான அரசியல் கோரிக்கைகள் இல்லாத எழுச்சியாக இருந்தது. விவசாயிகளின் எழுச்சி ஒடுக்கப்பட்டதற்குக் காரணம், நாட்டுப்புற பாட்டாளி மக்கள், நகரப் பாட்டாளி மக்களோடு ஒன்றுசேராமல் இருந்ததாகும்.”

“ஒரு எழுச்சி வெற்றி பெற வேண்டுமானால் அது உணர்வுப்பூர்வமான அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், அதற்கு முன்கூட்டியே தயாரிப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; அது ரஷ்யா முழுவதும் விரிவுற்று நகரத் தொழிலாளிகளோடு கூட்டணி பூண்டதாகவும் இருக்க வேண்டும். நகரங்களில் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு சமூக ஜனநாயகப் பிரசுரம் அல்லது செய்தித்தாளும், நாட்டுப்புறப் பாட்டளிகளுக்காகச் செய்யப்பட்ட வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளியின் ஒவ்வொரு சொற்பொழிவும், இன்னொருமுறை எழுச்சி நிகழும் காலத்தை, அது வெற்றியில் முடிவடையும் காலத்தை அருகே கொண்டுவரும்.” என்றார்.

பணக்கார வர்க்கத்திற்கு ஆதரவாகப் பாதிரிகள் போதனை செய்வதையும் அதிகார வர்க்கத்தையும் ராணுவத்தினரையும் கொண்டுள்ள ஜார் அரசாங்கம் முழுமையும் இந்த வர்க்கத்திற்கு ஆதரவாக உள்ளதையும் விவசாயிகளுக்கு நினைவூட்டுகிறார் லெனின்.
மூன்று பிரதான கோரிக்கைகளைப் பற்றி எழுதப் படிக்கத் தெரிந்த, சுயமாகச் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ளும்பொழுது, விவசாயிகளின் எழுச்சி உணர்வுப்பூர்வமான அரசியல் நோக்கம் கொண்டிருக்கும்.

முதலாவது கோரிக்கை ரஷ்யாவில் எதேச்சதிகார அரசாங்கத்திற்குப் பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் சபையைக் கூட்டுவதாகும். இரண்டாவது கோரிக்கை-எல்லா வகையான நூல்களையும் செய்தித்தாள்களையும் வெளியிட எல்லோருக்குமான உரிமை. மூன்றாவது கோரிக்கை-மற்ற சமுதாய படிநிலையினருடன் முழு சமஉரிமையை வழங்குவதைச் சட்டத்தின் மூலம் அங்கீகரிப்பது.

பண்ணை அடிமைமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் கமிட்டிகளை அமைப்பதும் ஆகுமென்கிறார் லெனின். மேலும் ஒடுக்குமுறையின் காரணங்களை எவன் அறிந்துகொள்கிறானோ, எவன் ஒடுக்குமுறை நிகழ்ச்சி ஒவ்வொன்றையும் எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடுகிறானோ அவனே உண்மையான சமூக ஜனநாயகவாதியாவான் என்கிறார்.

மேலும் கிளர்ச்சிப் பிரச்சார இயக்கத்திற்கு இவ்வாறு வழிகாட்டுகிறார்;-“சிலந்தி வலைக்குள் ஈ அகப்பட்டுக் கொண்டு இருப்பதுபோல அண்டையிலுள்ள நிலப்பிரபுவின் பிடிக்குள் ஊர் பூராவும் சிக்கிக் கிடக்கிறது; இது எப்பொழுதும் இந்த அடிமை நிலையிலிருந்து விடுகிறது, அதிலிருந்து தப்ப முடியாது. நீதியை நாடுபவர்களும், எதிர்ப்படும் முதல் போலீஸ் கையாளைக் கண்டு அஞ்சாதவர்களும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட, விவேகமுள்ள, நம்பகமானவர்களுமான விவசாயிகளை அந்தத் தொழிலாளி பொறுக்கி எடுக்க வேண்டும்.

இந்தத் தீராத அடிமைத் தனத்தின் காரணங்களை விளக்கி, பிரபுவம்சத்தினர்கள் கமிட்டிகளின் உதவியால் நிலப்பிரபுக்கள் விவசாயிகளை எப்படி ஏமாற்றினார்கள், எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்பதை எடுத்து விவரிக்க வேண்டும் . பணக்காரர்களுடைய பலத்தைப் பற்றியும் அவர்கள் எப்படி ஜார் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லி, சமூக ஜனநாயகவாதிகளான தொழிலாளிகளின் கோரிக்கைகளைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

விவசாயிகள் சிக்கலற்ற இந்த சாமானிய விசயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும்பொழுது அவர்கள் நிலப்பிரபுவுக்கெதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பை உருவாக்க இயலுமா என்பதையும் விவசாயிகள் தம் முதல் பிரதான கோரிக்கைகளை முன்வைக்கமுடியுமா என்பதையும் கூடிக்கலந்து நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்கிறார்.

நாட்டுப்புற ஏழை மக்கள் வேலை நிறுத்தத்திற்குத் தயாரானால், பொதுக் கோரிக்கைகளைப் பற்றி முன்பே ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தால், அந்தக் கோரிக்கைகள் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தால் அல்லது கூட்டங்களில் தக்கவாறு விளக்கப்பட்டிருந்தால், அப்போது எல்லோரும் ஒன்றுபட்டு நிற்பார்கள். நிலப்பிரபு விட்டுக் கொடுக்கவோ அல்லது குறைந்தது அவன் கொள்ளையிடுவதைக் கொஞ்சமாவது மட்டுப்படுத்தவோ வேண்டிவரும்.

வேலைநிறுத்தம் ஏகோபித்த முறையில், வேலைப்பருவத்தில் ஏற்படுமாயின், நிலப்பிரபு, ஏன் துருப்புக்களோடு கூடிய அதிகாரிகள்கூட எதையும் செய்வது கடினமாக-காலம் வீணாகிவிடும்; நிலப்பிரபுவிற்கு நாசம் ஏற்படும் அபாயம் ; ஆகவே அவன் விரைவில் வழிக்கு வரத் தயாராகிவிடுவான் . நகரத் தொழிலாளிகள்கூட முதலில் ஒன்றுசேர்ந்து எப்படிப் போராடுவது எனத் தெரியாமல், என்ன கோரிக்கைகளை பொதுவாக வைப்பது எனத் தெரியாமல் வெறுமனே இயந்திரங்களை நொறுக்கவும், ஆலையை அழிக்கவும் முனைந்தனர். ஆனால் இப்பொழுது ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்த கற்றுக் கொண்டிருக்கின்றனர் என ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் குறிப்பிடுகிறார் லெனின்.இறுதியில் கீழ்க்கண்டவாறு நம்பிக்கையை விதைக்கிறார் லெனின்.

‘இறுதிப் போரட்டத்திற்காக எழுச்சியுறும் நாள் விரைவில் வரும்.தொழிலாளர்கள் அப்போது ஒருமனிதனாகத் திரண்டு நாங்கள் விடுதலை பெறுவோம் அல்லது போரிட்டு மடிவோம்’ என்றும் கூறுவர்; போரில் கொல்லப்பட்டு வீழும் நூற்றுக்கணக்கானவர்களின் இனத்தில் போராட ஆயிரக் கணக்கான புதிய, மேலும்அதிக உறுதியுள்ள போர் வீரர்கள் முன்வருவர். அப்போது ரஷ்யா முழுவதிலும் உள்ள விவசாயிகளும் எழுவார்கள், நகரத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கிளம்புவார்கள் .

தொழிலாளர்கள், விவசாயிகளின் விடுதலைக்காக இறுதிவரை போராடுவார்கள். அப்போது இந்தத் தாக்குதலை ஜாரின் பெரும் படைகளாலும் தாங்க முடியாது. உழைப்பாளி மக்களுக்கு வெற்றி கிட்டும். தொழிலாளி வர்க்கம் அகன்ற, பரந்தபாட்டையில், எல்லா உழைப்பாளி மக்களையும் எல்லாவிதமான ஒடுக் குமுறைகளிலிருந்தும் விடுவிக்க அணிவகுத்துச் செல்லும். சோஷலிசத்துக்குப் போராடத் தன் விடுதலையைத் தொழிலாளி வர்க்கம் பயன்படுத்தும்.”

தொழிலாளிகளிடையேஅர்த்த அடர்த்தியோடு அவர் எழுதிய வரிகள் மிகச்சரியாக ரஷ்யப் புரட்சியில் அமலானதை வரலாறு பறைசாற்றியது எனின் மிகையன்று.

Leave A Reply

%d bloggers like this: