தில்லியில் உள்ள பவ்னா தொகுதியின் இடைத்தேர்தலில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைச் செய்திருக்கிறது. இதன் மூலம் பாஜகவின் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தில்லியில் உள்ள பவ்னா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராம் சந்திரா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் வெட்பிரகாஷ் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் சுரேந்தர் குமார் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் தலைநகராக தில்லியை எப்படியாவது தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் கட்சியின் வசம் கொண்டு வர வேண்டும் என பாஜக பல்வேறு திட்டங்களுடன் களம் இறங்கியது. அதன் ஒரு பகுதியாக  எப்பாடு பட்டாவது பவ்னா தொகுதி இடைத்தேர்தலில் வென்று வெற்றி கொடியை பறக்க விட வேண்டும் என தனது நிர்வாகிகளுக்கு பாஜக உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து  பண பலம், அதிகார பலத்துடன் பாஜக மக்களை சந்தித்தது.
இந்நிலையில் இன்று பவ்னா தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி வெற்றி மகத்தான வெற்றி பெற்றது. இதில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ராம் சந்திரா 59 ஆயிரத்து 886 வாக்குகள் பெற்று 24 ஆயிரத்து 52 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
பாஜக வேட்பாளர் வெட் பிரகாஷ் 35 ஆயிரத்து 834 வாக்குகளும், காங்கிரஸ் 31 ஆயிரத்து 919 வாக்குகளும் பெற்றனர்.
தில்லி தேர்தலில் பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட அனைத்து வல்லமையுடன் களம் கண்ட பாஜக தோற்கடிக்கப்பட்டிருப்பது பாஜகவினருக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: