காரக்பூர்
செல்ஃபி எடுக்கச் சென்று தண்ணிரில் விழுந்த மகனைக் காக்க சென்ற பேராசிரியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
மேற்கு வங்க மாநிலம் ஐ ஐ டி காரக்பூரில் பேராசிரியராக பணி புரிபவர் ஜாய்தீப் பட்டாசார்ஜி.  இவர் கடல்வளம், மற்றும் கப்பல் துறையில் பணி புரிந்து வந்தார்.  தங்கள் வளாகத்தில் உள்ள நீர்நிலைக்கு தனது இருமகன்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.  நேற்று விடுமுறை தினம் என்பதால் உல்லாசப் பயணமாக இருவரையும் அங்குள்ள சிறு கப்பலில் கூட்டிச் சென்றுள்ளார்.
அவரது மகன்களில் ஒருவர் நான்கு வயதே ஆன சிறுவர்.   அவர் தன்னிடமிருந்த மொபைல் மூலம் கப்பல் ஓரத்துக்குச் சென்று செல்ஃஃபி எடுக்க முயன்றுள்ளார்.  அப்போது அவர் தவறி விழுந்து விட்டார்.  மகனை காக்க பேராசிரியர் ஜாய்தீப் உடனடியாக நீரில் குதித்தார்.  மகனை வெளியே இழுக்கும் போது அவர் நீரினுள் சென்று விட்டார்.  கப்பலில் இருந்த மெய்க்காப்பாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   ஆனால் பேரராசிரியர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்.
பேராசிரியரின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.  இது குறித்து ஐஐடி காரக்பூரின் பதிவாளர் பிரதீப் கோஷ், “எங்களின் துக்கத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.   அவரைப் போல் ஒரு பேராசிரியரை இழந்தது கல்வி உலகுக்கே ஒரு மாபெரும் இழப்பு.  அவர் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.
உலகெங்கும் செல்ஃபி எடுக்கும் போது மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 127 என  ஒரு ஆய்வில் பதிவாகி உள்ளது.  இதில் 76 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: