சண்டிகர்,
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக நீதிபதி நேரடியாக சிறைக்குச் செல்கிறார்.
தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குல்மீத் ராம் ரஹீம் சிங்கின் கைதை கண்டித்து தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாபில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சிர்ஸா ஆசிரமத்தைச் சுற்றி போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. ரோட்டக் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் குக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்காக பஞ்ச்குலா சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக் சிறைக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை அவர் அறிவிக்கிறார்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டிஜிபி சாந்தனு கூறியபோது, ரோட்டக் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. முக்கிய பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்துள்ளோம். 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. 926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது என்றார். ஐ.ஜி. நவ்தீப் சிங் கூறியபோது, ரோட்டக் சிறை வளாகத்தில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Leave A Reply