தமிழகம் முழுவதும் கோவில்கள், மடங்கள், சர்ச்சுகள், வக்ஃப் வாரிய நிலஙகளில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.

கம்பத்தில் நடைபெற்றுவரும் சங்கத்தின் 29-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

தமிழகம் முழுவதும் கோவில்கள், மடங்கள், சர்ச்சுகள், வக்ஃப் வாரிய நிலஙகளில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிலங்களை ஏலம் விடுவது, குத்தகையை திடீரென உயர்த்துவது, விவசாயிகளை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் எடுத்து விவசாயிகளை நிர்பந்தப்படுத்தும் நிலை உள்ளது. பல தலைமுறைகளாக மேற்கண்ட நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு மேற்கண்ட நிலங்களின் குத்தகைதாரர்களாக குத்தகைதாரர் பதிவுச்சட்டத்தின் கீழ்பதிவு செய்து பாதுகாத்திட வேண்டும்.

குத்தகைக்கு சாகுபடி செய்வோர் அரசு தரும் இழப்பீட்டுத்தொகையை கூட பெற முடிவதில்லை. நிலஉரிமையாளருடன் குத்தகைக்கு சாகுபடி செய்பவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைத்திட மாநில அரசு ஆவண செய்திட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்:

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டு காலத்தில் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக அரசே கூறுகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டு காலமாக படிப்படியாக மழைப்பொழிவு குறைந்து கொண்டே வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகாலமாக தென்மேற்கு பருவமழையும். வடகிழக்கு பருவமழையும் தமிழகத்துக்கு மிக மிக குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால் விவசாயம் பொய்த்துப் போய், பயிர்களெல்லாம் காய்ந்து கருகிவிட்டன. கருகிய பயிரைக் கண்ட விவசாயிகள், வாங்கிய கடனை எப்படி அடைப்பது எனத் தெரியாமல் வயலிலேயே அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்றுள்ளது. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் மாண்டு போயினர். ஆனால் ஆட்சியாளர்களோ விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்தினர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கார்பரேட் கம்பெனிகளுக்கு அவர்கள் பெற்ற வங்கி கடனை வராக்கடன் என அறிவித்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள சொற்ப அளவு பயிர்கடனை கூட தள்ளுபடி செய்ய மறுகின்றனர். கடன் தள்ளுபடி கோரி நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்களை கூட கண்டு கொள்ள மறுக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் இத்தகைய அலட்சியப்போக்கை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்களையும் தற்கொலை சாவுகளையும் தடுத்து நிறுத்திட கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

விளைநிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு 35 ஆண்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின, இதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்வேறு விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டங்களை டெல்டா மாவட்டங்களில் நடத்தினோம், சட்டமன்றத்திலும் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு பின்னர் மீத்தேன் எடுப்பதற்கு மாநில அரசு தடை விதித்தது. இதன் பின்னர் மத்திய அரசு ஷேல்கேஸ் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்த்து. இதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டது. இதன் பின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் 16 இடங்களில் அமுல்படுத்திட தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், வடகாடு கிராமங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றன. இன்று வரை நெடுவாசலில் மக்கள் போராடி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Leave A Reply

%d bloggers like this: