தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறது. ஐந்து முக்கிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள காரணத்தால் இங்கு சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய், கனிகள் தொலை தூரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருநகரங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை முறையிலான சாகுபடி இம்மாவட்ட விவசாயிகளிடம் அதிகளவில் வரவேற்பை பெற்று அதிகரித்து வருகிறது. விவசாயிகள் நச்சுத் தன்மை கொண்ட உரங்கள், பூச்சிக் கொல்லிகளை விட்டு விட்டு பாரம்பரிய இயற்கை சாகுபடி முறைக்கு மாறி வருகின்றனர்.கிருஷ்ணகிரியில் மா சாகுபடியில் ஈடுபட்டு வரும் சித்தையா நாயுடு அவர்கள் கடந்த 2012-இல் தனது நண்பரின் அழைப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது பெற்ற சுபாஷ் பால்கோரின் பயிற்சி முகாமில் பங்கு பெறும் வாய்ப்பு பெற்றார். அவரின் இயற்கை வேளாண் சாகுபடி முறைகளால் ஈர்க்கப்பட்டு தான் முகாமில் கண்டதை தனது தோட்டத்தில் செயல்படுத்த துவங்கினார்.

இயற்கை சாகுபடியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கிய முன்னோடியாக திகழ்ந்த நாயுடுவை பின்பற்றி பலர் இயற்கை சாகுபடி முறைகளை பின்பற்ற துவங்கினர். இன்று 58 விவசாயிகள் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர்.

விவசாயி ராஜேந்திர நாயுடு இயற்கை விவசாயத்தை பின்பற்றி தனது 4 ஏக்கர் தோட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் மிச்சப்படுத்தியதாக தெரிவிக்கிறார். அவரது இயற்கை இடு பொருட்களாக சாணம், கோமியம் மற்றும் வெல்லமே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இராசயன இடு பொருட்கள் இல்லாமல்300 – 400 டன்கள் வரை மா மகசூல் எடுத்துள்ளார்.

இயற்கை விவசாயம் தந்த வேளாண் புரிதல்கள்:
முதலில் இயற்கை வேளாண்மைக்கு மாறும் போது உற்பத்தி 30 முதல் 50 சதவீதம் வரை 2-3 வருட காலத்திற்கு குறைந்தது. இத்தகைய காலகட்டத்தில் இயற்கை விளைபொருட்களுக்கு கிடைக்கும் உயர்ந்த விலைகள் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இவ்வாறு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பழங்களுக்கு நல்ல வெளிநாட்டு சந்தையும் உள்ளது.

முதலில் இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை என்றாலும் காலப் போக்கில் தரச் சான்றிதழ் பெறும் நடைமுறைகள் போன்றவற்றை அறிந்து கொண்டதாக தெரிவிக்கிறார் மருத்துவர் ரங்கநாதன்.

இவரும் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இயற்கை விவசாயியாக மாறியுள்ளார். இவரது தோட்ட பொருட்களான மா, தென்னை மற்றும் முருங்கைக்கு உரிய இயற்கை சான்றிதழ்களை பெற்றுள்ளார். மேலும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நிறுவனத்திடம் (APEDA) பல விவசாயிகள் உரிய இயற்கை சான்றிதழ்களை பெற்று சாகுபடி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழு சார்ந்த விவசாய முறைகள்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதி ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ளது. அங்குள்ள விவசாயிகள் அதிக லாபம் பெற்று வருகின்றனர். அங்கு மாநில அரசு ஒரு குழுவிற்கு ஒரு வேளாண் வல்லுனரை நியமித்து விவசாயிகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனை வழங்கி வருகிறது. சமீபத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பால்லேகரை ஆலோசகராக நியமித்துள்ளது. மேலும் அவர் ஆந்திராவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அந்த மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதியில் அமைக்கவும் உதவ உள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயியான மருத்துவர் ரங்கநாதன் 40 மாடுகளை சாணத்திற்காக மட்டுமே வளர்த்து வருகிறார். பால் அவருக்கு இரண்டாவது பட்சம்தான். ஆனால் பால் விலையே இயற்கை சாகுபடிக்கு ஊக்கம் தருவதாக கூறுகிறார். நாட்டு மாடுகளில் பெறப்படும் ‘A2 பால்’ தற்போது சந்தையில் லிட்டருக்கு ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் விவசாயிகளின் தோட்டங்களில் லிட்டருக்கு ரூ.30 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இது வெளிநாட்டு மாடுகளின் பாலை விட உடல் நலத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. பசு பால் கறப்பதை நிறுத்திய உடன் பசுவின் சாணத்திற்காக வளர்க்கப்பட்டாலும் பொருளாதாரரீதியாக விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை.எனவே தங்களது மாடுகளை கொல்லாமல் பராமரிக்க அரசு உதவ வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்டமும், அதன் அருகில் உள்ள ஆந்திரா மாநிலமும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த செலவில், உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாமல் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் இயற்கை வேளாண் விளைப் பொருட்களை சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற்று வருகின்றன.

தமிழக விவசாயிகளும், தமிழக வேளாண் துறையும் குழுசார்ந்த இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை பின்பற்றினால் அதிக லாபம் மற்றும் சர்வதேசச் சந்தைகளில் நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வாய்ப்புகளையும் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை: முனைவர் தி.ராஜ்பிரவின், உதவிப் பேராசிரியர் வேளாண்மை விரிவாக்கத் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave A Reply

%d bloggers like this: