போபால்,

பள்ளி குழந்தைகள் 400 பேரின் உயிரை காப்பாற்றுவதற்காக தலைமை காவலர் ஒருவர் 10 கிலோ வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் சிடோரா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10 கிலோ வெடிகுண்டு புகைத்து வைக்கப்பட்டிருந்தது கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெளியே எடுத்தனர். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கிருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல், வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி பின்னர் பாதுகாப்பான இடத்தில் அந்த வெடிகுண்டை வைத்துள்ளார்

பள்ளியில் வெடிகுண்டு உள்ள தகவல் பரவியதும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், படேல் வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடுவதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் அதை பார்த்து வீடியோ எடுத்துள்ளார். 12 வினாடி மட்டுமே உள்ள அந்த வீடியோ காட்சிகள் இப்போது  இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து தலைமை காவலர் அபிஷேக் கூறும்போது, பள்ளி மாணவர்களிடம் இருந்து வெடிகுண்டை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அப்போது எனக்கு இருந்தது. அதே நேரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தும் ஒதுக்குப்புறமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

காவல்துறை ஆய்வாளர் சதீஷ் சக்சேனா கூறுகையில், கிராமத்துக்கு அருகில் ராணுவ துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. ஆனால், இந்த குண்டு எப்படி பள்ளிக்கு வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். எனினும், தலைமை காவலரின் துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: