கம்பம், ஆக.27-
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரு க்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29-வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. கம்பத்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் ஞாயிறன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சுருக்கம் வருமாறு:- வரலாறு காணாத வறட்சியால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. பயிர்கள் காய்ந்து கருகின. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. குடிநீருக்காக பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டதை தமிழகம் சந்தித்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சி யிலும் மரணமடைந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வறட்சி நிவாரணம் கேட்டு சக்தி மிக்க போராட்டங்களை நடத்தியது. இதர விவசாய அமைப்புகளும் போராடின, வலுவான போராட்டங்களுக்கு பிறகு மாநில அரசு வறட்சி நிவாரணம் தருவதாக முதலில் அறிவித்து விட்டு பின்னர் இடுபொருள் இழப்பீடு மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஏமாற்றிவிட்டது, மத்திய அரசு சொற்ப தொகையை கொடுத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது.

காய்ந்து போன பயிர்களுக்கு உரிய பயிர்க்காப்பீடும் கிடைக்கவில்லை. கடுமையான வறட்சியால் காய்ந்து கருகிய பயிர்களுக்கும், அனைத்து நீண்டகால பயிர்களுக்கும், மற்றும் காய்ந்து போன தென்னை மரங்களுக்கும் நிவாரணத்தை வழங்கவில்லை. இதுவரை இழப்பீடு கிடைக்காத அனைத்து விவசாயிகளுக்கும் மாநில அரசு வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் மரணமடைந்த அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா பத்து லட்சம்ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை முழுவதுமாக மாநில அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்ட வறட்சி நிவாரண தொகையை மத்திய அரசு தமிழகத்திற்கு முழுமையாக தர வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் வங்கிகளிடம் ஒப்படைத்து அவர்கள் லாபம் சம்பாதிக்கவே மத்திய அரசு வழிவகை செய்துள்ளது, எனவே காப்பீடு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். தீர்மானத்தை மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் முன்மொழிந்தார், மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுருகன் வழிமொழிந்தார்.

Leave A Reply