பதினைந்தாண்டு கால குற்றவியல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளிதானென நீதிமன்றம் சொல்கிறது. தண்டனையை இனிமேல்தான் அறிவிக்க வேண்டும், ஆனால் குற்றவாளியின் ஆதரவாளர்களால் அப்பாவி மக்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படு கிறது -மரண தண்டனை வரையில்! ஊரே தீக்கிரையாகிறது. மாநிலம் முழுக்க வன்முறை பரவுகிறது. தலைநகர் தில்லி உள்பட அண்டை மாநிலங்களையும் அது தீண்டுகிறது. ஹரியானாவின் சிர்சா நகரை மையமாகக் கொண்ட, ஆன்மீக இயக்கமாகத் தன்னைச் சொல்லிக்கொள்கிற தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது, அவரது பக்தர்களான இரண்டு பெண்கள் கூறிய வன்புணர்வுப் புகாரில் உண்மை இருக்கிறதென, வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்துதான் இவ்வளவும்.

குற்றவாளிதான் என்ற தீர்ப்புக்கே இத்தனை வன்முறையெனில் தண்டனை அறிவிக்கப் படுவதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்ற கவலை சரியானது. நீதிமன்றம் செயல்படும் பஞ்ச்குலா நகரில் லட்சக்கணக்கானோர் குவிவதற்கு அனுமதித்தது மனோகர் லால் கட்டாரியாவின் பாஜக அரசு. தொழிலாளர்களோ விவசாயிகளோ தங்களது நியாயமான போராட்டங்களில் பங்கேற்க திரள்வதற்குத் தடை விதிக்கப்படுகிறபோது, பெரும் வன்முறை எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் சாமியாரின் ஆதரவாளர்கள் குவி வதை மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணியில் இருப்பது கவனக் குறைவு அல்ல, வகுப்புவாத அரசியல் அடிப் படையிலான வாக்கு வங்கி பற்றிய கவனமே.

ஆகவேதான், சண்டிகர் உயர்நீதிமன்றமே, இது வாக்கு வங்கிக்கான அரசியல் சரணாகதி என்று கடுமையாகச் சாடியிருக்கிறது. பாஜக தலைவர்களோ, வன்முறையை எதிர்க்கட்சி கள் அரசியலாக்குகின்றன என்று கூறி நழுவு கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியே கூட தனது ட்விட்டர் பதிவிலும் ‘மன் கி பாத்’ பேட்டியிலும் வன்முறைகள் வருத்தமளிக்கின்றன, அவற்றை சகிக்கவியலாது என்று பொத்தாம் பொதுவாகக் கூறியிருக்கிறாரேயன்றி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது பற்றியோ, அவரைச் சுற்றிக் கட்டப்பட்ட வகுப்புவாத அரசியல் பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. வகுப்புவாதம் பாஜகவின் ஒரு அடித்தள மாயிற்றே என்பதோடு, வழக்கு நடந்துகொண்டி ருந்தபோதே சாமியாரை அவரது ஊருக்கே சென்று பிரதமர் நேரில் பாராட்டிய கடந்த காலமும் இருக்கிறதே! சாமியார் முன்பு காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவர், பின்னர் பாஜக பக்கம் மாறிவிட்டவர். மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் சங் பரிவார அமைப்புகளைப் போலவே தேராசச்சா அமைப்பும் ஊக்கமடைந்திருக்கிறது.

கட்டாரியா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டு மென்ற கோரிக்கை வன்முறையைத் தடுக்காத நிர்வாக பலவீனத்திற்காக மட்டுமல்ல, அரசின் கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கில் எடுத்துக் கொடுத்து குற்றவாளியுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தவர் என்பதாலும்தான். பாலியல் கொடுமைகள், கொலைகள் மட்டுமல்லாமல் வன நிலம் ஆக்கிரமிப்பு, நதி வளம் சீரழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுகிற போலி ஆன்மீகவாதிகளுடனும் சாதிய ஆதிக்க சக்திகளுடனும் அரசியல் ஆதாயத்திற்காக உறவுகொண்டு, அவர்களது செல்வாக்குவளர ஒத்துழைக்கிற உத்தியைக் கடைப்பிடிக்கிற வர்களுக்கும் இந்த வன்முறை ஒரு எச்சரிக்கை.

Leave A Reply

%d bloggers like this: