சேலம் பிரித்திகா யாஷினியைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் இரண்டாவது திருநங்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் தனது உடலில் ஏற்பட்ட பாலின மாறுதல்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முறையான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முழுமையாக திருநங்கையாக மாறிய பின்னர் தனது பெயரை நஸ்ரியா என மாற்றிக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட நஸ்ரியா தேர்ச்சி பெற்றார். ஆனால் கடந்த மாதம் 31-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்கச் சென்றபோது திருநங்கைக்கான முறையான சான்றிதழ் அவரிடம் இல்லை எனக் கூறி அவரை உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நஸ்ரியா வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த நஸ்ரியா திருநங்கைகளுக்கான சான்றிதழை தனக்கு வழங்காமல் சமூக நலத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக தாமதம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையினர் அன்று மாலையே நஸ்ரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் மூலம் திருநங்கைக்கான அடையாள அட்டையை வழங்கினர். இதன் பின்னர் நஸ்ரியா நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். பின்னர் உடல் தகுதித் தேர்வில் நஸ்ரியாவை அனுமதிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. பின்னர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தேர்விலும், சனிக்கிழமை நடைபெற்ற சான்றிதழ்கள் சரிபார்ப்பிலும் நஸ்ரியா பங்கேற்றார்.

அவை இரண்டிலும் தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்து சனியன்று காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை தமிழக காவல்துறையில் முதன்முறையாக துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

Leave A Reply