ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைவர் ஹரிஸ் வர்மா நடத்தி வரும் பசு பாதுகாப்பகத்தில் பசி மற்றும் நோய் தாக்குதலால் பலியான 300 மாடுகள் இறைச்சிக்காக விற்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜக தலைவர் ஹரிஸ் வர்மா பசு பாதுகாப்பகம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவரது மனைவி லட்சுமி வர்மா, பீமேத்ரா மாவட்டம் பில்சந்திராவில் உள்ள பசு பாதுகாப்பகத்தையும் , இவர்களது உறவினர் நாராயணன் மயூரியில் உள்ள பசு பாதுகாப்பகத்தையும் பராமரித்து வந்தனர். சமீபத்தில் இந்த 3 பசு பாதுகாப்பகத்தில் இருந்த 300 மாடுகள் பசியாலும் நோய் தாக்குதலாலும் பலியாகின. இந்நிலையில் கோசாலை அருகே ராட்ச குழி தோண்டி பலியான மாடுகளை புதைத்ததாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த 3 பசு பாதுகாப்பகமும் மாநில அரசின் கவ் சேவா ஆயோக் என்ற கால்நடை நலன் சார்ந்த அமைப்பின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 3 பசு பாதுகாப்பகத்திற்கும் ரூ.1.65 கோடி வரை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி பசு பாதுகாப்பகத்திற்கு பயன்படுத்தாத காரணத்தினால் மாடுகள் பட்டியினாலும், நோய் தாக்குதலுக்கு சிகிச்சை இல்லாமலும் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் மாடுகள் இறந்ததாக வர்மா தெரிவித்திருந்தார். எனினும் புகாரின் அடிப்படையில் வர்மாவை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த மாடுகளை இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்து தோல், எழும்பு வர்த்தகத்தில் வர்மா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வரும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply