கம்பம்;
எதிர்வரும் காலங்கள் போராட்டங்கள் நிறைந்த காலமாகும். விவசாயிகள் தொழிலாளி வர்க்கம் என அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நடத்தும் போராட்டம் மத்திய பாஜக அரசிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும், இந்தப் போராட்டங்கள் மூலம் மோடி அரசை அப்புறப்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் கூறினார்.

கம்பத்தில் ஞாயிறன்று தொடங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-
நாட்டில் வனத்தையும் நிலத்தையும் கனிமவளத்தையும் சூறையாட முயற்சி நடைபெறுகிறது. இதற்கெதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம். நாம் நம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து விவசாயிகள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகளின் கைகளில் உள்ள நிலங்களை பறித்து அந்நிய முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும் கொடுக்கும் அரசாக உள்ளது.விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலன் பெற்றதை விட காப்பீட்டு நிறுவனங்களே பலன் பெற்றிருக்கின்றன. 11 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகள் மற்றும் மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெற்ற தொகை 21 ஆயிரத்து 500 கோடி. இதில் நடப்பாண்டில் ஏற்பட்ட இழப்பிற்காக 4 ஆயிரத்து 200 கோடி வழங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் 712 கோடி. இதைவிட சற்று கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளன.
விவசாயிகள் ஒப்புதல் இன்றி அவர்களது நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கான சட்டத்தை மாநில அரசுகள் மூலம் கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது.

நல்லது நடக்கவில்லை
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிப்போம். அவர்களுக்கு வழங்கும் கூலியை 300 ரூபாய் ஆக்குவோம் என்றார்கள். ஆனால் 34 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. 92 நாட்கள் வரை வேலை கொடுத்த மாநிலம் திரிபுரா மட்டுமே. மோடி ஆட்சி அமைந்தால் நல்லது நடக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால் விவசாயிகளுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலை தான் அதிகரித்திருக்கிறது. கடந்தாண்டில் மட்டும் 4 ஆயிரத்து 191 தற்கொலைகள் நடந்துள்ளது. சில மாநிலங்களில் தற்கொலைகளே இல்லை என்று புள்ளி விபரங்களை மறைத்துக் கூறுகிறார்கள். கடந்தாண்டில் நடைபெற்ற 62 சதவீத தற்கொலைகள் பாஜகவும் அதன் கூட்டாளிகள் ஆளும் மாநிலத்தில் தான் நடைபெற்றுள்ளன. தமிழகத்திலும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. விவசாயிகளின் துயரத்தை பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை.

பாஜக அரசு வெற்றிபெற்ற பிறகு நானும் ஹன்னன்முல்லாவும் மத்திய வேளாண்துறை அமைச்சரைச் சந்தித்து தேர்தல் காலத்தில் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் குறித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். அப்போது அவர் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை நாங்கள் அளிப்போம். அதெல்லாம் செய்வது என்ன சாத்தியமா என மிகச் சாதாரணமாகக் கூறினார்கள்.

நெல்விலை ரூ.2500
கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள இடது ஜனநாயக முன்னணி நெல்லுக்கான கொள்முதல் விலை 2 ஆயிரத்து 250 வழங்குகிறது. இதையே பின்பற்றி மற்ற மாநிலங்களில் கேட்டால் வழங்க மறுக்கிறது.

தமிழகத்தில் தேயிலை, காபி, மிளகு, ஏலம் போன்ற பணப்பயிர்கள் விளைகின்றன. மத்திய அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகளினால் இவற்றிற்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, மின் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக மாறிவிட்டது.

மோடி குஜராத் மாடலில் ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அதை குஜராத் மக்களே நிராகரிக்கிறார்கள். நாட்டில் அதானியும் மோடியும் இணைந்து கூட்டாட்சி நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.அவரது ஆங்கில உரையை வெங்கேடஷ் ஆத்ரேயா தமிழில் மொழியாக்கம் செய்தார்.

 

Leave A Reply

%d bloggers like this: