தமிழ் இலக்கிய உலகத்தா்ல் கரிசல் காட்டு இலக்கியச் சிற்பி, வட்டாரவழக்கு இலக்கியத்தின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படும் மூத்த எழுத்தாளர் கி.ரா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். சோவியத் புரட்சியின் நூற்றாண்டு, மார்க்ஸ் 200 கருத்துரிமைகளுக்கு எதிராக நிலவும் அரசியல் சூழல் ஆகியவைகள் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். எளிய சொற்களால் ஆழமான கருத்துகளையும், அனுபவத்துடன் கூடிய வரலாற்றுத் தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்தார் தோழர் கி.ரா.சோவியத்யூனியன் 70 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்த நெருக்கடிகளையும் தாங்கிப்பிடித்ததற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று எது தெரியுமா? அந்நாட்டின் இலக்கியங்களே ஆகும் என்றார்.

அம்மக்கள் இயற்கையை நேசித்தனர். ஆழ்மனத்தின் உணர்வுகளை, கற்பனைகளை மனதார ரசித்தனர். சோவியத் புரட்சியின் விளைவுதான் தமிழகத்தின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உருவாகவும் விரிவடையவும் காரணம். தமிழகத்திற்கு நல்லநல்ல புத்தகங்கள் கப்பல் கப்பலாய் வந்தன. சோவியத் நாடு மாத இதழ் நான் விடாமல் படிக்கும் புத்தகங்களில் ஒன்று என்றார். சோவியத் நாடு இதழில் வெளிவந்த “பனிக்காலத்து ஒக் மரம்” மிக சிறந்த கதை. தேனீக்கள் பற்றிய கதையில் மக்களின் வாழ்வியலை எழுதினர்.

சோவியத் யூனியனில் நிலவி வந்த இலக்கியச் சூழல் பற்றி பேசினார். ஆட்சியாளர்கள் குறித்த கதைகள் ஏராளம். அதில் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும். எதிரிகள் சோவியத் சமூகத்தின் மீது திணித்த கட்டுக்கதைகள், செய்திகள் ஏராளம். அரசு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை அவனது கிராமத்து தாய் பார்க்க வருவதாக இருக்கும். பல சிரமங்களுக்கு இடையில் தாய் தனது மகனை சந்திப்பார். வசதியான வாழ்க்கை, ஆடம்பரமான உணவு வகைகள் இவைகளைப் பார்த்துவிட்டு தனது மகனிடம் இவ்வளவு வசதியுடன் நீ வாழ்வது, நாள்தோறும் இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிடுவது போல்ஷ்விக்குகளுக்குத் தெரியுமா? என்று கேட்பாள். அவர்களிடம் நீ ஜாக்கிரதையாக இரு என்பாள். கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மனைவிமார்கள் முடிவெட்டிக்கொள்ள பாரிசு செல்வதாகக் கதைகளாக, செய்திகளாக வெளிவந்தன. அனைத்தையும் மீறி அம்மக்கள் சோசலிச சோவியத்தை பாதுகாத்தார்கள். புரட்சிக்குப்பின் சோவியத்தை தலை நிமிரச்செய்த ஸ்டாலினை கொல்வதற்காக எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. எதுவும் வெற்றி பெறவில்லை.

“செய்வினை’ வைத்து கொல்ல முயற்சித்தார்கள். செய்வினை போன்ற மூடநம்பிக்கைகளில் ஸ்டாலினுக்கு நம்பிக்கையில்லை. எனவே செய்வினை ஸ்டாலினை ஒன்றும் செய்யமுடியவில்லை. மூடநம்பிக்கைகள் நம்புகிறவர்களைதான் தொந்தரவு செய்யும்.  பேச்சு டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” நாவலுக்குத் திரும்பியது. அது மூன்று பாகங்களைக் கொண்டது. தினமணி ஆசிரியர். டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்கள் மொழி பெயர்த்திருந்தார். நல்ல மொழியாக்கம். நம்ம ஊர் மகாபாரதக் கதையைப் போன்றது போரும் அமைதியும். பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் ரஷியா மீது படையெடுத்ததன் தாக்கத்தையும், ரஷியாவின் ஐந்து அரச குடும்பங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியாயம். மிகச்சிறந்த நாவல் அது என்றார்.

மகாபாரதத்தில் சிக்கலான நேரத்தில் கதாபாத்திரமாக வியாசர் வருவது போல போரும் அமைதியும் நாவலில் டால்ஸ்டாய் ஒரு பாத்திரமாக வருவார் “உலக மகா எழுத்தாளர்” டால்ஸ்டாய். சோவியத் யூனியன் அவர்களது நாட்டு இலக்கியவாதிகளையும் தாண்டி ஆண்டன் செக்காவ், பால்சாக் தவிர, மாபசான், விக்டர்யுகோ, அலக்ஸாண்டர் குப்ரின், லூசின், ஓ.ஹென்றி போன்றவர்கள் சோசலிச எதார்த்த இலக்கியத்திற்கு வழங்கப்பட்டகொடை. தமிழ் இலக்கியத்திற்கும் தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்”, டி.செல்வராஜின் “தேநீர்” நாவல்கள் சோவியத் இலக்கியங்களின் பாதிப்புகளே ஆகும். ரஷியச் சிறுகதைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஆண்டன் செக்காவ் எழுதிய சிறுகதைகள்தான் உலகச் சிறுகதைகளுக்கு முன்மாதிரி. “தும்மல்” சிறுகதைப் பற்றி அடிக்கடி அனைவரும் கூறுவர். இன்னொரு கதை நான் சொல்றேன். ஒரு பெரிய அதிகாரி தினம் அலுவலகத்துக்கு காரில் வந்து போவான்.

அவனுடய பியூன் தன் வீட்டுக் கல்யாணத்துக்காக பத்திரி்கை கொடுத்தான். அதிகாரி கல்யாணத்துக்கு வருவான்னு கொடுக்கல. தகவலுக்காக கொடுத்தான். பின்னர் ஒரு நாள் அதிகாரி ஆபிசுக்கு போகும் போது கார் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர் இறங்கி சரி செய்ய முக்கால் மணி நேரம் ஆகும் என்றான். அதிகாரி கிழே இறங்கி நாம் இருக்குமிடம் எது என்று யோசித்தார். நம்ம பியூன் வசிக்கிறப் பகுதி என்று அறிந்து, இன்னைக்குத்தானே கல்யாணம் அவன் வீட்டுக்குப் போவோம். அவனும் சந்தோசப்படுவான் என்று நினைத்து விசாரித்தார். தூரத்தில் பேண்டு சத்தம் கேட்டது. பேண்டு வாத்தியத்தின் சத்தத்தை வைத்தே சந்தோசமா துக்கமா என்று கண்டுப்புடிச்சிடலாம். அதிகாரி கல்யாணவீட்டுக்குச் சென்றார். அதுவரையிலும் சந்தோசமாக இருந்த கல்யாணவீடு அதிகாரியைப் பார்த்ததும் சந்தோசம் போய் விட்டது.

ஆண்டன் செக்காவ்களில் வார்த்தைகள் அனாவசியமாக இருக்காது. கச்சிதமாக இருக்கும். அவரின் படைப்பு வெற்றிக்கு அதுவும் காரணம். சிறுகதைக்கு சரியான வடிவம் கொடுத்தது ஆண்டன் செக்காவும், மாபசானும் தான்.  பேச்சு கி.ராவின் கதைகள் குறித்து நகர்ந்தது. அவரது முதல் சிறுகதை வை.கோவிந்தனின் சக்தி இதழில் வெளி வந்தது. கு.அழகிரிசாமி அதன் ஆசிரியர். “சீப்பு” பற்றிய கதை. ஒரு அறையில் நண்பர்கள் சேர்ந்து தங்கியிருந்தார்கள் அவர்கள் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவார்கள். அது சீக்கிரம் உடைந்துவிடும். அதில் ஒருவனுக்கு கல்யாணம் ஆகி தந்தத்தில் செய்த சீப்புக் கிடைத்தது. தினமும் அந்த சீப்பை அவனிடம் வாங்கி மற்றவர்கள் பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் அதை திருப்பி வாங்கி வைப்பதில் அவனுக்கு சங்கடம். ஒரு நாள் அதை வாங்கி பத்திரப்படுத்துவதை விட்டுவிட்டான். அறையில் சீப்பு பொதுவாகி போனது.

கி.ராவின் “கதவு” சிறுகதை பலராலும் பாராட்டப்பட்டது. அது தாமரை பொங்கல் மலரில் தோழர் ஜீவானந்தம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்டது. எழுத்தாளர் சுந்தரராமசாமி அதை படித்துவிட்டு “செக்காவியம்” போல இருந்தது என பாராட்டினார். கி.ராவின் கதைகள் விஜயபாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதி இதழில் வந்தது. அவரது “தமிழக நாடோடிக்கதைகள்” பல பதிப்புகள் வெளி வந்தது. ஆரம்பத்தில் கதை எழுதுவதில் பிரச்சனைதான். நமது கதையின் முதல் வாசகர் பத்திரி்கையின் எடிட்டர் தான். அவருக்குப் பிடிக்கவேண்டும்.அப்போதுதான் வெளிவரும் என்று சொன்னார் கி.ரா.நாட்டுப் புறக்கதைகள் மரபுகளை மீறுவதாக சொல்வார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.அவைகள் தான் மரபுகளையும், நடைமுறைகளையும் உண்மையாகச் சொல்கின்றன.

மற்றவைகளோ மரபுகளை மீறுகின்றன. இலக்கிய வகைகள் எல்லாம் நாள்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். கவிதை, சிறுகதை, நாவல், கடிதஇலக்கியம், உரைநடை இலக்கியம் என்று குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்கமுடியாது. ஏதேனும் ஒரு வடிவம் வருவதற்கு சிரமங்கள் இருக்கும். என்னுடைய “கோபல்லகிராமம்” நாவல்இல்லை என்று சிலர் வாதிட்டனர்.  நாம கற்பனையை ரசிக்கத் தெரிஞ்சுக்கணும். பாலை மட்டுமே அருந்தும் அன்னப்பறவை, வாசனை நிறைந்த பாரிஜாதமலர். இவைகள் எல்லாம் கற்பனை தான். ரசிக்கக்கூடியவை. கம்பன் ஒரு பாடலில் “அசுன்னப்பறவை” என்றுக் குறிப்பிட்டு அது கோரச் சத்தம் கேட்டால் உயிரை விட்டுவிடும் என்று எழுதியிருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழல் கருத்துரிமைக்கு எதிராக இருப்பது குறித்து கி.ரா, அது நல்லதல்ல. குறிப்பாக பெருமாள் முருகன் விஷயம், அவர் எதுவும் இல்லாததைச் சொல்லவில்லை. ராமாயணத்தில், மகாபாரதத்தில் இது போன்ற கதைகள் இருக்கின்றன. தசரதனுக்கு 60,000 மனைவிமார்கள் இருந்தும் குழந்தை இல்லை. அதற்கு வேறு ஏற்பாடுகள் செய்துதான் புத்திர பாக்கியம் கிடைத்தது. எழுத்தாளனுடைய கருத்துகளை சட்டம் போட்டு அடக்கிட முடியாது. அது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுவிடும் என்றார். “மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவன். அப்படி ஒதுங்கியபோதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்காம மழையையே பார்த்துட்டு இருந்துட்டேன்”. என்று அடிக்கடி் கூறக்கூடிய கி.ராவின் படைப்புகள் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராக இருந்ததற்கும் தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் பெருமைகொள்ளலாம்.

கி.ராவின் 95வது பிறந்தநாள் விழாவையொட்டி சிறப்பான ஆய்வரங்கு நிகழ்ச்சியும், கட்டுரைத்தொகுப்பு வெளியீடும் நடைபெற உள்ளது. கி.ரா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி விடை பெற்றோம்.

Leave A Reply

%d bloggers like this: