கம்பம்;
இயற்கை வளங்களை பாதுகாக்கும் காவலர்களாக விவசாயிகள் மாற வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைகளே இல்லை என்கிறார்கள். ஆனால் விவசாயிகள் சங்கம் இறந்த விவசாயிகளின் குடும்பங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29-ஆவது மாநில மாநாடு கம்பத்தில் இன்று தொடங்கியது. மாநாட்டில் தலைமை உரையாற்றிய மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
விவசாயிகள் சங்கத்தின் 29-ஆவது மாநாடு கம்பம் பள்ளத்தாக்கில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. 1947-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு கொண்டிருந்த போது கம்பத்தை அடுத்துள்ள உத்தமபாளையத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது கம்பத்தில் மீண்டும் மாநாடு நடைபெறுகிறது.

விவசாயிகள் சங்கம் நெருப்பாற்றை கடந்து வந்துள்ளது. நம்முடைய தொடர்ச்சியான போராட்டங்களினால் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இன்னும் பெறவேண்டியது அதிகமுள்ளது.இன்றைக்கு விவசாயநிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெறுகிறது. அதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நரேந்திரமோடி அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.

தமிழக விவசாயிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். அரசு அளித்துள்ள பயிர்க்காப்பீடு யானை பசிக்கு சோளப்பொரியாக உள்ளது. மதுரையில் கிரானைட் கொள்ளை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளை, தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பாலுக்கும் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.மனநோயாளிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்தினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கிறது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி. 24 மணி நேரமும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். கடும் வறட்சி, தண்ணீர் பஞ்சத்தால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழகத்தில் தற்கொலைகளே இல்லை என்கிறது அரசு. ஆனால் நாமே இறந்த விவசாயிகளின் குடும்பங்களை பாதுகாத்து வருகிறோம்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: